தொடர் சிக்கலில் விஸ்வரூபம்

உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்து நடிக்கும் விஸ்வரூபம் படம் ஆரம்பம் முதலே பல சிக்கல்களை கடந்து வருகிறது.

படத்திற்கு 90 கோடி செலவு செய்து விட்டதாக கூறும் கமல், படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட வேண்டும் என்று களமிறங்கினார். இதனால் முதன்முறையாக விஸ்வரூபம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே டிடிஎச்.ல் வெளியாகும் என அறிவித்தார். பல்வேறு டிடிஎச் நிறுவனங்கள் மூலம் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில் திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பால் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டார் கமல். அதன்படி ஜனவரி 25ல் திரையிலும் பிப்ரவரி 2 டிடிஎச்.சிலும் வெளியாகும் என அறிவித்தார். 
 
படம் வெளியாவதற்கு முதல் நாள் வரை எந்த பிரச்சினையுமின்றி தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கிவிட்டது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தை வெளியிட முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்த தமிழகத்தில் படத்தை வெளியிட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் புதுவையில் படம் ரிலீசாவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனத் தெரிகிறது. 
 
இந்நிலையில் இது முஸ்லிம்களுக்கு எதிரான படம் அல்ல என்றும் தேசபக்தி கொண்ட எவரும் படத்திற்கு தடை கோரமாட்டார்கள் என்றும் கமல் தெரிவித்துள்ளார். படம் அறிவித்தபடி நாளை வெளிவருமா அல்லது தடை நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.