சமையல் குறிப்புகள்

    
   • கொத்துமல்லி துவையல் அரைக்கும் போது மிளகாய்க்குப் பதிலாக மிளகை வைத்து அரைத்துப் பாருங்கள். சுவையும் மணமும் வித்தியாசமாகவும் இருக்கும். சூப்பராகவும் இருக்கும்.
   • மைதா மாவு தோசை வார்க்கப் போகிறீர்களா? அதற்குமுன் சிறிதளவு முருங்கை கீரையை நெய்யில் பொரித்து மாவுடன் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். அபார சுவையாக இருக்கும். 
   • அடைக்கு மாவு அரைக்கும்போது அத்துடன் வேகவைத்து தோலுரித்த இரண்டு உருளைக்கிழங்கை சேர்த்து அடை சுட்டுப்பாருங்கள. சுவை அலாதியாக இருக்கும்.
   • துவரம் பருப்பிற்குப் பதிலாக கொள்ளுப் பயிறை ஊற வைத்து அடை வார்த்தால் சுவையான அடை மட்டுமல்ல. வாயுத் தொந்தரவும் இருக்காது. 
   • ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது 2 ஸ்பூன் கோதுமை மாவை வறுத்து பாலில் கரைத்து சேர்த்தால் பாயசம் கூடுதல் மணத்துடன் சுவைக்கும். 
   •  பஜ்ஜி போட காய்கறி இல்லையா? பஜ்ஜி மாவில் வேர்க்கடைலையை சேர்த்து பஜ்ஜி செய்யவும். வித்தியாசமான பஜ்ஜி ரெடி.  
   • இட்லிப்பொடி அரைக்கும் போது சிறிதளவு வறுத்த கறிவேப்பிலையை சேர்த்து அரைத்துப்பாருங்கள். ருசி நன்றாக இருக்கும். 
   •  தேங்காய் சட்னி அரைக்கும்போது பச்சை கறிவேப்பிலையை கலந்து அரைத்துப் பாருங்கள். மணமான, சுவையான சட்னி தயார். கறிவேப்பிலை தலைமுடி வளர உதவும். இரும்புச் சத்து உள்ளது.  
   • தோசை மாவில் சிறிதளவு மோர் சேர்த்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும். மோர் இல்லையென்றால் எலுமிச்சம்பழ சாறு சேர்க்கலாம். அல்லது தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்க்கலாம். 
   •  முளைகட்டிய பயறு வேண்டுமா? முதல் நாளே தேவையான பருப்பு வகைகளை ஊறவைத்துவிடவும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு ஹாட்பேக்கில் போட்டு மூடிவிடுங்கள். மறுநாள் திறந்து பார்த்தால் முளைகட்டிய பயறு ரெடி. எக்ஸ்ட்ரா புரோட்டீன் சத்து கிடைக்க முளைகட்டிய பயறு உண்பது நல்லது.  
   • வித்தியாசமான பாயசம் செய்ய வேண்டுமா? இரண்டு வாழைப்பழத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மி்க்ஸியில் அரைக்கவும். அத்துடன் ஒரு டம்ளர் பால் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தால் வெரைட்டி பாயசம் ரெடி. 
   •  பூரி மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்துப் பிசைந்தால் பூரி மிருதுவாக இருக்கும்.  
   • கொழ கொழ வெண்டைக்காய் பொரியல் பிடிக்கவில்லையா? வெண்டைக்காயை வதக்கும் போது சிறிது தயிர் கலந்து செய்தால் கொழகொழப்பு இருக்காது. 
   •  ஒரு கிலோ கோதுமையுடன் 100 கிராம் கொண்டை கடலை 100 கிராம் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்து மாவாக்கினால் எக்ஸ்ட்ரா புரோட்டீனுடன் கூடிய சப்பாத்தி செய்யலாம்.  
   • இட்லி மாவு கெட்டியாக இருந்தால் பொரிக்காத அப்பளத்தை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து இட்லி செய்து பாருங்கள். இட்லி மிருதுவாக இருக்கும். 
   •  மீந்து போன ரவா உப்புமாவில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை செய்யலாம்.  
   • மிருதுவான உதிராத போளி வேண்டுமா? மைதா மாவை ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து பின்பு போளி செய்யுங்கள். 
   •  குலோப் ஜாமூன் பாகு காய்ச்சும் போது ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமல் இருக்கும்.