பிஸினஸில் ஜெயிக்க 5 வழிகள்


பிஸினஸ் செய்ய வேண்டும். புகழ் பெற்ற தொழிலதிபராக வர வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கனவு. ஆனால், அதற்காக கடும் முயற்சி செய்ய வேண்டும்; பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும் என வரும் போது நம்மில் பலர் அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிலரோ, சரியாக திட்டமிட்டு வெற்றி இலக்கை அடைந்துவிடுகின்றனர். அந்த மிகச் சிலரில் நீங்களும் இடம் பெற விரும்புகிறீர்களா? வெற்றியாளர்கள் பின்பற்றும் 5 வெற்றி விதிகளை நீங்களும் பின்பற்றிப் பாருங்கள். நீங்களும் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கும் காலம் விரைவில் கைகூடும்.

1. உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்:

உங்கள் இலக்கு என்ன? அதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை என்ன? என்பதை உண்மையாகவும் நேர்மையாகவும் முடிவு செய்யுஙகள். மேம்பாக்காக இலக்கை திட்டமிடாதீர்கள். 
இன்னும் ஒரு வருடத்திற்குள் நான் சொந்தத் தொழில் செய்து குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது ஈட்டுவேன் என இலக்கு நிர்ணயிங்கள். அந்த இலக்கை எட்டிப் பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள்.

தீட்டிய திட்டத்தை படிப்படியாக ஒவ்வொன்றாக செயல்படுத்துங்கள். நிச்சயமாக உங்கள் இலக்கை ஓராண்டில் எட்டிப் பிடிப்பீர்கள்.

2. எப்போதும் சிறந்ததையே விரும்புங்கள்

உங்கள் இலக்கு எப்போதும் ஒரு படி உயர்ந்ததாகவே இருக்கட்டும். எல்லாவற்றிலும் சிறந்ததையே விரும்புங்கள். அது உங்கள் இலக்காக இருக்கலாம் அல்லது நீங்கள் உடுத்தும் உடையாகக் கூட இருக்கலாம். ஒரு உயர்ந்த தரத்துடன் கூடிய உடை உங்களை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும். நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை உங்களுக்கு தோற்றுவிக்கும். உயர்தரமான உடை என்பதற்கு விலையுயர்ந்த உடை என்று பொருளல்ல. தரத்தில் உயர்ந்ததாக இருக்க வேண்டும். உடுத்தும் உடை எதுவானாவும் அதை சிறப்பாக உடுத்த வேண்டும். எல்லாம் நம் முன்னோர்கள் கூறியதுதான். கந்தையானும் கசக்கிக் கட்டு என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே?

நீங்கள் உங்கள் இலக்கை அடைவதற்கு தேவையான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதியும் திறமையும் வளர்வதற்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

3. தோல்வி பயத்தை விரட்டுங்கள்; விடா முயற்சி செய்யுங்கள்

தோல்வி வரும்போது துவண்டு விடாதீர்கள். எல்லா வெற்றியாளர்களும் எல்லா முயற்சியிலும் வெற்றி பெற்றுவிடுவதில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் சிறு சிறு தோல்விகள், இடையூறுகள் நம்மை மீண்டும் அடுத்த கட்டத்துக்கு செல்ல விடாமல் தடுத்து விடும். எங்கே தவறு செய்தோம், மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் முயற்சி செய்வது எப்படி என தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முயற்சியைத் தொடர வேண்டும்.

4. சோர்ந்து போகாதீர்கள்:

எப்போதும் சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். சோர்வு வரும் போது பேட்டரியை ரீசார்ஜ் செய்வது போல உங்களையும் ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். மனதுக்குப் பிடித்த ஏதேனும் பொழுதுபோக்கு உங்களை மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்பட வைக்கும்.

இனிய சங்கீதம், நல்ல புத்தகம், இயற்கையை ரசித்தல், குடும்பத்தினரோடு பொழுதைக் கழித்தல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அடுத்த சில மணிகளில் நீங்கள் மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்பட வேண்டுமே தவிர அங்கேயே நின்றுவிடக்கூடாது.

5. பரிசோதித்துக் கொள்ளுங்கள் :
இலக்கை நோக்கி பயணிக்கையில், நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இலக்கை அடைவதற்கு இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.