வங்கியில் கடன் வாங்கப் போறீங்களா?

டன் இல்லாமல் எந்தத் தொழிலும் நடப்பதில்லை. அதே நேரத்தில் அதிகக் கடன் இருந்தாலும் எந்தத் தொழிலும் நடப்பதில்லை. அளவான கடன் இருந்தால் மட்டுமே நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.

வங்கியில் கடனுக்கு முயற்சி செய்யும் முன் உங்களுக்கு எவ்வளவு கடன் தேவை என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள். கடன் கிடைக்கிறது என்பதற்காக தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு எவ்வளவு தேவை, அதை எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள் என்பதை சரியாக கணக்கிட்டு கடனுக்கு விண்ணப்பியுங்கள்.  

கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் வங்கியை அணுகி என்னென்ன தேவை என்பதை தெளிவாக விளக்கமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். பெரும்பாலான வங்கிகள் சொத்து பிணையம் இல்லாமல் கடன் தருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சொத்துப் பிணையத்திற்கு இணையாக வங்கிகள் கடன் தருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் 10 லட்சம் மதிப்புள்ள சொத்து இருக்கிறது. ஆனால் உங்களுக்கு 10 லட்சம் கடன் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதே போன்று 10 லட்சம் மதிப்பில் இயந்திரம் வாங்க வங்கிக் கடன் கேட்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முழுத்தொகையும் கிடைக்காது. உங்கள் தேவையில் 70 அல்லது 85 சதவீதம் என்ற அளவிற்கே கடன் கிடைக்கும். மீதத் தொகையை நீங்கள் உங்கள் கையிலிருந்துதான் செலுத்த வேண்டியிருக்கும்.

கடன் தொகை உங்கள் தொழில் வளர்வதற்கு உதவுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 10 லட்சம் மதிப்பில் இயந்திரம் வாங்கினால் அதன் மூலம் உற்பத்தி பெருகும், கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றால் கடன் வாங்கலாம். ஆனால், கார் வாங்குவது, வீட்டுச் செலவுகளை செய்வது என்று இறங்கிவிட்டால் அவ்வளவுதான். உங்கள் கடன் தான் கூடுமே ஒழிய வருமானம் இராது. எந்தத் தேவைக்காக கடன் வாங்குகிறோமோ அதற்கு மட்டுமே செலவழிக்க வேண்டும்.

மொத்தத்தில், பிஸினஸ் தேவைக்கு கடன் வாங்குவதால் வருமானம் கூடும் என்றால் கடன் வாங்கலாம். சொந்தத் தேவைக்கு கடன் வாங்குவது என்றால் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதைப் பொறுத்து கடன் வாங்கலாம்.