உங்கள் வாடிக்கையாளரை உங்களிடமே தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா?

பெரும் தொழில் முதல் சிறு கடை வரை அனைத்துக்குமே பெரும் பிரச்சினையாக இருப்பது புதிய வாடிக்கையாளரை பெறுவது. அப்படியே புதிய வாடிக்கையாளர் கிடைத்தாலும் அவரை தக்க வைத்துக் கொள்வது அதைவிட சிரமம்.

வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள். உங்கள் வாடிக்கையாளர் நிச்சயம் உங்களை விட்டு வேறு இடம் செல்ல மாட்டார்.

எப்போதும் உங்கள் வாடிக்கையாளரானாலும் சரி, சப்ளையரானாலும் சரி அவர்களுக்கு சரியானதையே செய்யுங்கள்.

உங்கள் சப்ளையரை மதித்து நடப்பது, அவர்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கிகளை சரி வர செலுத்துவது என்றிருந்தால், அவர் நிச்சயம் உங்களுக்காக ஓர் உயர்ந்த தயாரிப்பை தர முன் வருவார். உங்கள் நிறுவனத்திற்காக ஒரு பொருளை வாங்கி விற்க முற்படும் போது  எப்போதும் தரமானதையே உங்களுக்கு பரிந்துரைப்பார். அது நிச்சயம் உங்கள் வாடிக்கையாளரை கவர்ந்திழுக்கும். அவர் மீண்டும் மீண்டும் உங்களை நாடி வருவார்.

உங்களிடம் வாங்கும் பொருட்கள் நிச்சயம் தரமானதாகவே இருக்கும் என்பதை வாடி்க்கையாளர் அறியும் வண்ணம் செய்திடுங்கள். நீங்கள் விற்கும் பொருளாகட்டும் அல்லது வாடிக்கையாளர்களுடனான உங்கள் உறவாகட்டும். எதுவானாலும் நேர்மறையாக இருக்கட்டும். உங்கள் நேர்மையே உங்களுக்கான அடையாளமாக இருக்கட்டும்.

நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை பணியமர்த்துங்கள். ஊழியர்களுடான உங்கள் உறவு பாரபட்சமின்றி இருக்கட்டும். கடை நிலை ஊழியரானாலும் சரி, முதன்மை மேலாளரானாலும் சரி, எல்லோரையும் சரிசமமாக மதித்து நடக்க பழகிக் கொள்ளுங்கள்.

ஊழியர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். வாடிக்கையாளர் கோரும் சிறு சிறு தள்ளுபடிகளுக்கெல்லாம் உங்கள் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும்படி செய்யாதீர்கள். வாழக்கையாளர்கள் கேட்கும் சிறு சிறு விலை தள்ளுபடியை ஊழியர்களையே முடிவு செய்ய அனுமதியுங்கள்.

”கஸ்டமர் ஈஸ் கிங்” என்பதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்காக தொழில் செய்யுங்கள். உங்களுக்காக சப்ளையரை தொழில் செய்ய விடுங்கள். உங்கள் தொழில் தொய்வின்றி நடக்கும்.