உங்கள் நிறுவனப் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயலாற்ற வேண்டுமா?

கார்ப்ரேட் அலுவலகமாகட்டும்; அரசு அலுவலகமாகட்டும் அல்லது சாதாரண கடையாகட்டும்; எதுவாகயிருந்தாலும் பணிபுரியும் ஊழியர்கள் உற்சாகம் குறைந்து காணப்பட்டால் பணிகள் பாதிக்கப்படுவதோடு வாடிக்கையாளர் நல்லுறவும் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.

காலை அலுவலகம் தொடங்கியது முதல் மாலை பணி முடிந்து செல்வது வரை பணியாளர்களை தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்ற வைக்க சில சின்ன சின்ன யோசனைகள்.

எல்லா பணியாளர்களுக்கும், காலையில் அவசர அவசரமாக கிளம்பி டிராபிக்கில் மாட்டி அலுவலகம் வந்து இருக்கையில் அமரந்து வேலையை கவனிக்க தொடங்குவதற்குள் அப்பாடா போதுமடா சாமி என்ற எண்ணம் வந்துவிடும். அலுவலகம் வந்த களைப்பு ஒருபுறம், வீட்டு பிரச்சினைகள் மறுபுறம்.

ஒரு மாற்றத்திற்காக அவர்களது அலுவலக நேரத்தை சிறிது மாற்றியமைக்கலாம். உதாரணமாக ஐபிஎல் மேட்ச் நடக்கும் போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேலை நேரத்தை மாற்றியமைக்கலாம். அல்லது உள்ளூரில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தால் அவர்களுக்கு என்ட்ரி டிக்கட் கொடுத்து சீக்கிரமாக அவர்களை அனுப்பி வைக்கலாம். அல்லது இன்று இதுதான் உனது பணி. விரைவாக முடித்துவிட்டால் அலுவலக நேரம் முடியும் வரை இருக்காமல் கிளம்பச் சொல்லலாம்.

ஆண்டுக்கொரு முறை எல்லா பணியாளர்களும் சென்று வர பிக்னிக் ஏற்பாடு செய்யலாம். வழக்கமான அலுவல்களிருந்து இரண்டொரு நாட்கள் அவர்களை வெளியில் அழைத்துச் சென்றால் பேட்டரி ரீசார்ஜ் ஆவது போல் புத்துணர்ச்சி கிடைக்கும்.

விளையாட்டு பிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு உங்கள் நிறுவனம் சார்பில் ஒரு டீம் உருவாக்கலாம். உள்ளுர் வெளியூர் என விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போது உங்கள் நிறுவன டீமை கலந்து கொள்ளச் செய்யலாம்.

அலுவலக வேலையில் சில மணி நேரங்களை அவர்களுக்காக விட்டுக் கொடுத்தால் அவர்கள் புத்துணர்ச்சியுடன் அடுத்த நாள் வேலையை தொடங்குவதற்கும் வேலையை சிறப்பாக செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

அதே நேரத்தில் எப்போதும் ரிலாக்ஸ் மூடிலேயே இல்லாமல் வேலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வேலையையும் சிறப்பாக செய்ய வேண்டும். தேவைப்படும் போது ரீசார்ஜ் செய்து கொள்ளவும் வேண்டும்.

இதுபோன்ற சில வழிகளை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.