தொழில் தொடங்க தயாராக இருக்கிறீர்களா?

சிலருக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது போல இருக்கும். சிலருக்கு ரிஸ்க் எடுப்பதில் ஆர்வமிருக்காது.

தொழில் முனைப்பு என்பது அதிக ரிஸ்க்; அதிக மன உளைச்சல் நிறைந்தது. நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க இயலாது.

'மாட்டை மேய்த்தோமா, கோலம் போட்டோமா' என்று இருந்து விட்டு, மாதம் பிறந்தால் முள்ளங்கி பத்தை போல சம்பளம் என்று விரும்புபவர்களுக்கும், 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவு' என்பவர்களுக்கும் கண்டிப்பாக சொந்தத் தொழில் ஒத்து வராது.

சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் நேரம், காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். ஒவ்வொரு மாதம் பிறந்ததும், நமக்கு கையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ சம்பளம், வாடகை, மின்சாரம், டெலிபோன் பில் என்று ஏகப்பட்ட விஷயங்களுக்கு செலவு செய்ய வேண்டும்.

சுய தொழில் என்பது நீண்ட காலப் பயணம். அரசு வேலை போல ரிட்டையர்மென்ட் கிடையாது. 'ஓவர் நைட்டில் ஒபாமா' ஆவதெல்லாம் கதைக்கு சரி. நிஜத்தில் அப்படியல்ல.

தோல்வியை ஏற்கும் மனப்பக்குவமும், தொடர்ந்து முயற்சி செய்யும் குணமும் தொழில் முனைவோருக்கு அவசியம்.

தங்களது ஐடியா மேல் நம்பிக்கையும், சலிக்காமல் உழைக்க தயாராகவும் இருப்பவர்கள் மட்டுமே தாராளமாக தொழி்ல் தொடங்கலாம்.