உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர...

Fat Boyதென்னகத்தின் தன்னிகரற்ற உணவு வகைகளான இட்லி, இடியாப்பம் போன்ற ஆரோக்கியத்தை கெடுக்காத உணவுப் பழக்கங்கள் எல்லாம் மலையேறி விட்டது. இன்றைய இளைஞர்கள் மட்டுமல்ல. பெரியவர்களும், சிறுவர்களும் கூட பிட்சா, பர்கர் போன்ற வெளிநாட்டு உணவுக் கலாசாரத்திற்கு மாறி விட்டனர். விளைவு? உடல் பருமன் உள்பட ஏகப்பட்ட ஆரோக்கிய குறைபாடுகள்.

இது போன்ற ஆரோக்கிய பாதிப்புகள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே சில நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.

சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பதோடு மட்டுமில்லாமல், உங்கள் குழந்தை மூன்று வேளையும் உணவு உண்பதை கட்டாயப்படுத்துங்கள். 
குழந்தைகளுக்கென்று ஸ்பெஷலாக சமைப்பதை விட, குடும்பத்தினர் அனைவருக்கும் சத்தான உணவு சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதிக செலவு வைக்காமலும், சமைப்பதற்கு எளிதாகவும் இருக்கும் சத்தான உணவு வகைகளையே தயார் செய்யுங்கள்.

சாப்பாட்டுக்கு முன்னர் உங்கள் குழந்தைக்கு பசி ஏற்படும் போது, பழங்கள், வேக வைத்த பருப்பு வகைகள், உலர் பருப்புகள் எனப்படும் வேர்க்கடலை போன்றவற்றை கொடுக்கலாம். சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை பண்டிகை மற்றும் விசேஷ தினங்களுக்கு ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

வார இறுதி நாட்களில் அல்லது பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். அருகில் உள்ள கடைகளுக்கு உங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள். இது அவர்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் நடைபயிற்சி செய்த பலனைத் தரும்.

இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் குழந்தைகளை சிறு வயது முதலே ஆரோக்கியமாக வளர்க்க முடியும்.