இளமையை மீட்டெடுக்க வேண்டுமா?

வறண்ட சருமம், தோல் சுருக்கம் என உங்கள் இளமைத் தோற்றம் மாறிப் போய் விட்டதா? நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? 

தினந்தோறும் இரவில் தூங்கச் செல்லும் முன் உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். மாசு, தூசு, மேக்கப் என முகத்தில் படர்ந்துள்ள எல்லாவற்றையும் அறவே சுத்தப்படுத்துங்கள். மென்மையான, சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேஸ் வாஷ் பயன்படுத்துங்கள்.

ஸ்ட்ரெஸ் எனும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள். மன அழுத்தம் உங்கள் உடலிலுள்ள கொலோஜனை சிதைப்பதால் சருமம் அதிக அளவு பாதிக்கப்படும். ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, வீட்டைச் சுற்றி சின்னதாக வாக்கிங் செய்வது போன்றவை மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்க உதவும்.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமானால், கட்டாயம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும். சிகரெட்டில் உள்ள நிகோட்டின் விரைவிலேயே உங்களை முதிர்ந்த தோற்றத்திற்கு கொண்டு வந்துவிடும். தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் மாசுகளை விட சிகரெட் பத்து மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். தேவையான அளவு ஓய்வு எடுப்பது உங்களை எப்போதும் இளமையாக வைத்திருப்பதுடன், புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கும்.

உடலுக்கு போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால் உங்கள் சருமம் பாதிப்புக்குள்ளாகும். உங்கள் கையில் உள்ள தோல் பகுதியை லேசாக கிள்ளவும். உங்கள் தோல் பகுதி மீண்டும் பழைய நிலையை அடைய சில விநாடிகள் அதிகம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு போதுமான அளவில் நீர் இல்லை என்று பொருள். உடனடியாக உங்கள் தாகத்தை தணித்துக்கொள்ளுங்கள்.

தினந்தோறும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் பருகி வருவது உங்கள் முகத்தை பொலிவுறச் செய்வதோடு, இளமையாகவும் இருக்கச் செய்யும்.

நல்ல சத்தான உணவையே எப்போதும் உட்கொள்ளுங்கள். பழச்சாறு, உலர் பருப்புகள், பச்சை காய்கறிகள் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயில் பொறித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.

சத்தான உணவுப்பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் இளமையையும் வளம் குன்றாமல் இருக்கச்செய்யும்