என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?லகிலேயே பெருமளவு விவசாய நிலப்பரப்பை கொண்டுள்ள இந்தியா அத்தியாவசிய விளைபொருள்களுக்கு கூட வெளிநாடுகளை நம்பியிருக்கும் சூழல் உள்ளது.

‘மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடித்த காலம்’, ‘சோழ நாடு சோறுடைத்து’ போன்ற சொற்றொடர்கள் தமிழகத்தின் விவசாய வளங்களின் எடுத்துக்காட்டுக்கு சான்று. 

ஆனால், தொழில் மயமாக்கலின் காரணமாக விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பது, மீத்தேன் வாயு எடுப்பது போன்றவற்றால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. 

மேலும், விளை நிலங்கள் ‘விலை நிலங்களாக’ மாறுவது, தண்ணீர் தட்டுப்பாடு, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையேற்றம், நகரமயமாதல் போன்ற காரணங்களால் வேலைவாய்ப்புகளுக்காக கிராமங்களை விட்டு நகரங்களை நோக்கி பெரும்பாலான மக்கள் குடிபெயர்ந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

இன்று மிக அதிகம் விலை உயர்ந்துள்ள உணவுப்பொருட்களில் வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் முக்கியமாக உள்ளது. எனவே இவற்றின் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது மத்திய அரசு.

இது தற்காலிக தீர்வுதானே தவிர, அத்தியாவசியப் பொருள்களுக்கு கூட வெளிநாடுகளை நம்பியிராமல் விவசாயத்தை மேம்பாடு அடையச் செய்வது ஒன்றே விலையேற்றத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.