கபாலி - வில்லங்க(?) வியாபாரம்

டப்பிடிப்பு  தொடங்கியது முதல் டீஸர் வெளியீடு வரை பிரம்மாண்டமாக பேசப்பட்ட கபாலி திரைக்கு வந்த பின் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது சர்வதேச மொழிகளில் உருவாக்கி கபாலியை ஒரு உலக சினிமா என்று மக்களை நம்ப வைக்கும் நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட மிகப்பிரம்மாண்டமான விளம்பர யுத்தி; கோச்சடையான், லிங்கா போன்ற படங்களுக்கு ஏற்பட்டது போல் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று, படம் வெளியான இரண்டு தினங்களுக்குள் வசூலை வாரிக் குவிக்க திட்டமிட்டு, சாமானிய ரசிகனால் நினைத்துப் பார்க்க முடியாத விலையாக 800 ருபாய் முதல் 2000 ரூபாய் டிக்கட் விலை வசூலிக்கப்பட்ட வியாபார யுத்தி; அதன் விளைவாக 110 கோடியில் உருவாக்கியதாக கூறப்படும் கபாலி படம் வெளியான இரண்டு தினங்களுக்குள் 200 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்ததாக கூறப்படுகிறது. 

பல ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யும் பாரம்பரிய வணிக நிறுவனங்களுக்கு இல்லாத முக்கியத்துவம் சினிமாத் துறைக்கு மட்டும் வழங்கப்படுவதன் அவசியம் என்ன என்று முன்னணி நாளிதழ் தலையங்கம் எழுதும் அளவுக்கு கபாலி வர்த்தகம் பேசப்படுகிறது.

உற்பத்தி விலை, அரசு வரி, உற்பத்தியாளரின் லாபம் இணைந்ததுதான் ஒரு பொருள் சந்தையை அடையும் போது  அதன் விலை. இங்கே, உற்பத்தியாளரின் லாபம் என்பது சந்தையின் தேவை / வரத்து என்பதை பொறுத்தே அமைகிறது. ஒரு பொருளின் தேவை ஆயிரம் எண்ணிக்கை என்றும், அதன் விலை ஒரு ரூபாய் என்றும் வைத்துக்கொண்டால், அந்த உற்பத்தி பொருளின் சந்தை மதிப்பு ஆயிரம் ரூபாய் தான். ஒருவேளை உற்பத்தியாளர் அதிக லாபம் பார்க்க வேண்டுமானால், ஒன்று அதன் உற்பத்தியை அதிகரித்து, அதற்கான கூடுதல் சந்தையை அவர் உருவாக்க வேண்டும். அப்படியில்லாமல். ஒரு ரூபாய் பொருளை நூறு ரூபாய் என்று அதிகரித்தால் அங்கே நியாயமான வியாபாரம் என்ற நோக்கம் அடிபட்டு போகிறது.

சூப்பர் ஸ்டாரின் உயர்ந்து விட்ட சம்பளம், தயாரிப்பு செலவு என ஏகத்துக்கும் அதிகமாகிவிட்டதென்றால், தயாரிப்பாளர் ஒன்று தயாரிப்பு செலவை குறைக்க வேண்டும். அல்லது திரைப்படத்தின் சந்தையை அதிகப்படுத்த வேண்டும்.

அதை விடுத்து, ஒரு திரைப்படத்திற்கு ஒரு டிக்கெட்டுக்கு அதிகபட்ச கட்டணம் இவ்வளவுதான் என அரசால் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், விருப்பம் போல் விலை வைத்து விற்பனை செய்வது என்பது நேர்மையான வியாபாரத்திற்கு அழகல்ல.