மரித்துப் போனதா மனித மனம்?

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்கிறார் வள்ளலார். தாவரத்திற்கு ஏற்படும் இன்னலைக் கூட தனதாக எண்ணி மனம் வாடிய மகான்கள் பிறந்தது நம் பூமி.

"காக்கை, குருவி எங்கள் ஜாதி" என்று சிறு உயிரையும் தன் உயிர் போல் நினைத்து பாடினான் பாரதி. 

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். பிற உயிர்களை தன்னுயிர் போல் காக்க வேண்டும் என்பது மனித நியதி. ஆனால், இன்றோ இயற்கையை அழித்து தொழில் வளம் என்ற பெயரில் நாட்டை கான்கிரீட் காடுகளாக்குவதிலும், உயிர்களை வதைத்து சுகம் காண்பதிலும் திளைக்கிறோம்.


சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் மாடியிலிருந்து நாயை தூக்கி எறிகிறார். அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு போரில் வெற்றி கண்ட மாமன்னனைப் போல் மகிழ்ச்சியில் திளைக்கிறார். இன்னொரு புறம், ஹைதராபாத்தில் ஐந்து சிறுவர்கள் நாய்க்குட்டிகளை உயிருடன் தீயிட்டு கொளுத்தி கும்மாளமிடுகின்றனர். 

உண்மையில், இவர்களுக்கு ஏன் இது போன்ற வக்கிர எண்ணம்? பிற உயிர்களை தன் உயிர் போல் எண்ணுவதற்கு இவர்களுக்கு எது தடையாக இருக்கிறது? தன்னை விட பலம் வாய்ந்தவர்களுடன் தங்களது வீரத்தை காட்ட முடியாது என்று இது போன்ற ஈனச் செயல்களை செய்து சுகம் காண்கின்றனரோ?

பிற உயிர்களை தன் உயிராக போற்றிக் காக்க வேண்டாம். குறைந்தபட்சம் அவற்றுக்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா?