ரஜினி - நேற்றும்; இன்றும்

டுமையான உழைப்பும், மக்களைக் கவர்ந்திழுக்கும் திறமையுமே, சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கிய ரஜினியை, இன்று பல கோடி வருமானம் ஈட்டும் நடிகராக உயர்த்தியிருக்கிறது.

ரஜினியை சரியாக இனங்கண்டு 'அபூர்வ ராகங்களில்' அறிமுகப்படுத்திய பாலசந்தர்; நடிப்புக்கு வித்திட்ட 'முள்ளும் மலரும்' மகேந்திரன்; 'மாஸ்' ஹீரோவாக அடையாளம் காட்டிய பல்வேறு படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் என ரஜினியை உருவாக்கியதில் பல்வேறு மூத்த இயக்குனர்களுக்கு முக்கிய பங்குண்டு.

1975ல் வில்லனாக நடிப்பை தொடங்கிய அவரது பயணம், இன்று வரை திரையில் கதாநாயகனாக நிலைத்திருக்கிறச் செய்திருக்கிறது. 

திரை நாயகர்களை நடிகர்களாக மட்டுமே பார்த்திடாமல், அவரைப் போலவே அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கு ரஜினி ரசிகனுக்கு மட்டுமே உண்டு. 

பாட்ஷா படம் வரை எந்தவொரு பெரிய சர்ச்சையிலும் சிக்காத அவர், பாட்ஷா பட வெற்றி விழாவில் அவர் கூறிய சில கருத்துக்களால் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.

பல ஆண்டு காலம் திரையில் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த அவரை மக்கள் அரசியல் சார்நது  எதிர்பார்க்கத் தொடங்கினர். தொடர்ந்து வந்த அவரது பாபா படம் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் ரீதியாக பலத்த எதிர்ப்பை அவருக்கு உருவாக்கியது. விளைவு; அவரது எந்த படத்திற்கும் இல்லாத பாதிப்பு பாபா படத்திற்கு ஏற்பட்டது. 

அதன் பின்னர் வெளிவந்த படங்கள் குறிப்பாக சிவாஜி, எந்திரன் போன்றவை அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. ஆனால், கோச்சடையான், லிங்கா போன்ற படங்கள் அவரது மார்க்கெட்டை சரித்தது. 

இந்நிலையில், மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டிய நிலையில் இளம் இயக்குநர்கள் மீது அவரது பார்வை படத் தொடங்கியது. அதன் விளைவாக, தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் வெளிவந்துள்ளது.

மாறுபட்ட கோணத்தில் ரஜினி படம் என்ற வரவேற்பு ஒருபக்கம், வழக்கமான ரஜினி இதில் 'மிஸ்ஸிங்' என்ற விமர்சனம் மறுபக்கம், இதையெல்லாம் விட சாதி ரீதியான படம் என்று பல்வேறு சர்ச்சை கருத்துகளும் நிலவி வருகிறது. 

புகழ் ஏணியின் உச்சத்தில் இருப்பவர்கள் இது போன்ற சர்ச்சைகளை சந்தித்தாக வேண்டும் என்றாலும், திரைப்படத்தை திரைப்படமாகவும், திரை நாயகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்கும் வரை இதுபோன்ற சர்ச்சைகளுக்கு என்றும் முடிவிருக்காது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.