பங்கு சந்தை - அறிமுகம்

நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் பல்வேறு அளவுகோல்களில் பங்குச் சந்தையும் ஒன்று. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை வைத்தே அந்நாட்டின் பொருளதாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை எளிதாக கூறிவிடலாம்.

பங்குச் சந்தையின் போக்கு நல்ல விதமாக முன்னேறி வருகிறதென்றால் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், பங்கு சந்தையில் சரிவு ஏற்படுகிறதென்றால் நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கல் உள்ளது என்பதையும் கண்கூடாக அறியலாம்.

இது ஒரு பொதுவான அளவுகோல்தான். இருப்பினும் பங்குச் சந்தையின் ஏற்ற இ.றக்கத்தை பொருளதார சுணக்கத்தையும், முன்னேற்றத்தையும் குறிக்கும் முக்கியமான காரணியாக கூறலாம்.

பங்குச் சந்தையின் செயல்பாடு :  
சந்தையில் வாங்குபவர் இருப்பார். விற்பவரும் இருப்பார். விற்பவர் அதற்கு ஒரு விலை நிர்ணயித்திருப்பார். வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்க விரும்புவார். இருவருக்கும் சாதகமான விலையே பங்கின் விலை. இங்கே விற்பவர் சந்தையின் தேவை எப்படியிருக்கிறது, நாளை இந்த நிறுவனத்தின் நிலை என்ன? சந்தையின் போக்கு போன்றவற்றை பொறுத்து விலையை நிர்ணயிப்பார். வாங்குபவருக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதும் சந்தையின் போக்கு பற்றி வேறு விதமான கருத்து இருக்கும். எனவே அவர் பங்கை வாங்குவார். இருவருக்கும் சாதகமான விலை எதுவோ அதுவே அன்றைய விற்பனை விலை.

சப்ளை & டிமாண்ட் - விலை ஏறி இறங்கும் மந்திரம் :  
காய்கறி சந்தையில் காய்கறி வரத்து அதிகமிருந்தால் காய்கறிகளின் விலை மலிவாக கிடைக்கும். அதே போல, பங்குச் சந்தையில் எந்த நிறுவனத்தின் பங்கு அதிகமாக விற்பனைக்கு வருகிறதோ அந்த பங்கு விலை மலிவாக கிடைக்கும். இதைத்தான் சப்ளை என்பார்கள்.

காய்கறி வரத்து தேவைக்கு குறைவாக இருக்கிறதென்றால் விலை எகிறி விடும். பங்குச் சந்தையில் தேவைக்கு குறைவாக நிறுவனப் பங்குகள் கிடைக்கிறதென்றால் அந்நிறுவனப் பங்கு விலை அதிகரித்து காணப்படும். இதைத்தான் டிமாண்ட் என்பார்கள்.

எப்பொழுதெல்லாம் தேவை (டிமாண்ட்) அதிகமாக இருக்கிறதோ அப்பொழுது விலை உயர்வதும், விற்பனை (சப்ளை) அதிகமாக இருக்கிறதோ அப்பொழுது விலை வீழ்வதும் பங்குச் சந்தையில் சகஜமான ஒன்று.