அழகே அழகே... தமிழின் அழகே...

நா.முத்துக்குமார் - காஞ்சியில் பிறந்த தமிழ்க் கவிஞன்.

'முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே….' - என்றும் நினைவில் கொள்ளத்தக்க தன்னம்பிக்கை ததும்பும் அழகான வரிக்கு சொந்தக்காரர்.பெரும்பாலானவர்களுக்கு திரைப்பாடலாசிரியராகவே அவரைத் தெரியும். ஆனால் அவர் ஒரு எழுத்தாளரும் கூட.  'கிரீடம்', 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர்.

திரைத்துறையில் இயக்குராக தடம் பதிக்க விரும்பிய அவர், பாலுமகேந்திராவிடம் உதவிய இயக்குநராகப் பணியாற்றிருக்கிறார். இயக்குநர் சீமானின் 'வீரநடை' படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகி, மரணத்தை தழுவும் வரையில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

'தங்க மீன்கள்' படத்தில் அவர் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர். தொடர்ந்து 'சைவம்' படத்தில் அவர் இயற்றிய 'அழகே, அழகே' என்ற பாடலுக்கும் தேசிய விருது பெற்றவர். அதுமட்டுமின்றி, இதே பாடலுக்காக பிலிம்பேர் விருதும், நார்வே திரைப்பட விருதும் பெற்றிருக்கிறார்.தமிழில் குறிப்பிடத்தக்க திறன் வாய்ந்த பாடலாசிரியர்களுள் ஒருவர். ஆனால், இளம் வயதிலேயே இயற்கை, 'தமிழின் அழகிய' உயிரைப் பறித்துக் கொண்டது வேதனைக்குரியது.