தலைவர்களால் கதி கலங்கிய 2016மிழக மக்களை துயரத்துக்குள்ளாக்கிய ஜெயலலிதாவின் மரணம், ஒட்டு மொத்த இந்தியாவையே ஒரே நாளில் புரட்டிப்போட்ட மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு, கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் - இம்மூன்று சம்பவங்களும் 2016ன் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பதை யாரும் மறக்க முடியாது.

கடந்த ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று வரை நீங்காமலே இருக்கிறது. தடையை நீக்கும் முயற்சியில் மாநில அரசு இன்று வரை தீவிரம் காட்டியதாக தெரிய வில்லை.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி 32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான்.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மாற்றப்பட்டு, உர்ஜித் பட்டேல் பதவியேற்பு, அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் சில.

75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் கழித்த ஜெயலலிதாவின் மரணம், அவரது நலம் விரும்பியும் அரசியல் விமர்சகருமான சோ மரணம் மற்றும் நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் போன்றவை துயர சம்பவங்களில் சில.

2015 டிசம்பரில் சென்னை பெருவெள்ளம் போன்று அதே வரிசையில் 2016 டிசம்பரில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களை திணறடித்த வார்தா புயலின் பாதிப்பு என மக்களை வாட்டிய பெரும் பிரச்சினைகளுக்கு மத்தியில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழர் மாரியப்பன், ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற இரண்டு பதக்கங்கள் ஆகியவை ஆறுதலான சில நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கவை.

விஜய் மல்லையாவின் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி ஒருபக்கம், அன்றாட செலவிற்காக பொதுமக்கள் ஏடிஎம்களிலும், வங்கி வாயில்களிலும் நாட்களை கடத்த நேரிட்ட மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பு மறுபக்கம்.

ஜெயலலிதாவின் மரணமும், சசிகலா ஏற்றிருக்கும் புதிய பதவியும் தமிழக மக்களை கலங்கடிக்க, மோடியின் அதிரடி அறிவிப்பு இந்தியாவை புரட்டியயடுக்க, டொனால்டு டிரம்பின் வெற்றி, அமெரிக்கர்களை மட்டுமல்லாது உலக மக்கள் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தி விடைபெற்றது 2016.