பெருகும் ஆதரவு - வலுக்கும் எதிர்ப்பு ! பதவியைப் பிடிப்பாரா சசிகலா?


மிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தி.மு.க. அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கி ஆட்சியை கைப்பற்றி, தொடர்ந்து 12 ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வகித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன்.

இன்று தமிழகம் முழுவதும் விரிந்து பரவியிருக்கும் அதிமுகவின் மூல விதை எம்.ஜி.ஆர். என்றால், அதை மென்மேலும் வளரச் செய்தது ஜெயலலிதா என்பது மிகையல்ல.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி, முதல்வர் பதவியையும் எட்டிப் பிடித்தவர் ஜெயலலிதா. 6 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டியிருந்தாலும், தனக்குப் பின் இவர்தான தனது அரசியல் வாரிசு என்று வெளிப்படையாக யாரையும் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஜெயலலிதாவின் திடீர் மரணம் அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய இழப்பை தந்திருக்கிறது. 

இனி ஜெயலலிதாவின் இடத்தை நிரப்புவது யார்? அதிமுக எனும் ஆலமரத்தை கட்டிக்காப்பது யார் என்ற கேள்வி எழுந்தபோது, அனைத்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் சசிகலாவை அடையாளம் காட்டுகின்றனர்.30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் இணைபிரியா தோழியாக வலம் வந்த அவரால் மட்டுமே அதிமுகவை கட்டிக் காக்க முடியும் என்கின்றனர் பெரும் பான்மையான அதிமுகவினர். மேலும், அவரை ஜெயலலிதா மறைவுக்குப்பின் காலியாக உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், தொண்டர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் சசிகலா தலைமை ஏற்பதை விரும்பாமல் பல்வேறு சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், அதிமுக எம்.பி.யான சசிகலா புஷ்பா, சசிகலாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், அதிமுகவின் சட்ட விதிகள் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க அனுமதிக்காது என்றும், சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கு முடிவு செய்யவுள்ள பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சசிகலாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமமாக உள்ள நிலையில், எதிர்ப்புகளை மீறி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது புறக்கணிக்கப்படுவாரா  என்பதை அதிமுக பொதுக்குழுதான் முடிவு செய்யும்.