புத்தாண்டு பதில் சொல்லுமா?

ஜெயலலிதாவால் உடன்பிறவா சகோதரி என்று வர்ணிக்கப்பட்ட அவரது தோழி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் அரசியல் பிரச்சார வீடியோக்களை பதிவு செய்யும் வேலை கிடைத்ததன் மூலம் சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் ஏற்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது தோழியாக வலம் வந்தவர்.

உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதா கூறினாலும், 1996ல் அதிமுக சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது, சசிகலாவையும், அவரது குடும்பத்தினரை யும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். பின்னர், மீண்டும் இருவரும் நட்பு பாராட்டி ஒன்று சேர்ந்தனர்.

பின்னர் 2011ல் தனக்கும், தனது ஆட்சிக்கும் எதிராக சசிகலா குடும்பத்தினர் ஈடுபடுவதாக, சசிகலாவை தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து வெளியேற்றி னார் ஜெயலலிதா. அதுமட்டுமில்லாமல், சசிகலாவையும், அவரது குடும்பத்தின ரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். அதன்பின்னர் மீண்டும் சசிகலா, ஜெயலலிதாவுடன் இணைந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை ஜெயலலி தாவின் உண்மையான தோழியாக வலம் வந்த சசிகலாவே அதிமுகவின் தலைமையேற்க தகுதியானவர் என்று அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கூடிநின்று, எதிர்ப்பாளர்களை புறந்தள்ளி பொதுக் குழுவில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.

கட்சித் தலைமை சசிகலாவிடம் சென்றது போல், தமிழக முதல்வர் பதவியும் அவர் வசம் செல்லுமா? அல்லது தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே மீதமுள்ள நான்கு ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிப்பாரா? என்பதற்கு புத்தாண்டில் விடை கிடைத்து விடும்.