ஜல்லிக்கட்டு போராட்டம்; மாற்றத்தை நோக்கி தமிழகம்

லகையே உற்றுநோக்க வைத்த இளைஞர்களின் எழுச்சிமிகு ஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டாலும் வெற்றி பெற்றுவிட்டது என்பதே உண்மை.

ஜல்லிக்கட்டு என்ற ஒற்றை வார்தையைக் கொண்டு ஒட்டுமொத்த தமிழகத்தை மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ஒன்றிணைத்த மாபெரும் போராட்டம் அது.

தற்போது போராட்டம் முடிந்துள்ள நிலையில், இளைஞர்களின் இப் போராட்டம் மக்களிடம் மாற்று சிந்தனையை விதைத்துள்ளது.

வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கடலூர், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில திரையரங்குகளில் கோக், பெப்சி குளிர்பானங்களுக்கு பதிலாக இளநீர் விற்பனையை தொடங்கியுள்ளனர்.

குடியரசு தின விழாவில் வழக்கமாக வழங்கப்படும் சாக்லெட்டுக்குப் பதிலாக சில அரசு பள்ளிகளில் கடலை மிட்டாய், எள் உருண்டை போன்ற இனிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாட்டு மாட்டுப் பால்தான் சிறந்தது என்று சிலர் அதை தேடிப்பிடித்து வாங்க ஆர்வமாக உள்ளனர். மேலும், பல்வேறு இடங்களிலும் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் மனதில் நாட்டு மாடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு, விவசாயத்திற்கு ஆதரவு, கிராமத்து பலகாரங்கள் என அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் திசையில் திரும்பியிருக்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே!