தலைமைக்கு தடுமாறும் தமிழகம்

மிழக அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளே பலம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வருவதும் இவ்விரு கட்சிகளுமே.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக ஜெ. அணி, ஜா. அணி என பிரிவு உண்டானது. ஆட்சியைப் பிடிப்பது ஜெயலலிதாவா? ஜானகியா என்ற எதிர்பார்ப்பு நிலவிய போது, கருணாநிதி ஆட்சியைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அதிமுக, திமுக என தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டு முறை ஜெயலலிதாவே முதல்வரானார்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின், கருணாநிதி கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றதில் எவ்வித தவறும் இல்லை. ஏனெனில், பல ஆண்டுகளாக கட்சியில் அங்கம் வகித்தவர் அவர். அதே போன்று, எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின், ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்ததிலும் தவறு இல்லை. இவரும்  கட்சி பொறுப்பில் இருந்தவர்.

ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப தகுதியான அடுத்த நபர் யார் என்ற கேள்வியில் தமிழகம் தவித்துக் கொண்டிருந்த நிலையில், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பது, அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு அழகு. 

ஆனால், இன்றைய சூழலில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வர் பதவிக்கு வரவிருக்கும் சசிகலா, அந்த பதவிக்கு தகுதியானவரா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்தும் எழுகிறது. காரணம், சசிகலா இதுவரை கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. ஜெயலலிதாவுடன் உடன் இருந்தவர் என்ற காரணத்திற்காக மட்டுமே அவரை பதவியில் அமர்த்த நினைப்பது முற்றிலும் தவறானது.

மாறாக, அவர் முதல்வர் பதவியை எட்ட வேண்டுமானால், ஜெயலலிதா மறைவுக்குப்பின் காலியாக உள்ள ஆர்.கே.நகர். தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த பிறகு பதவியை அடையலாம். அல்லது அவருக்கு சாதகமான ஏதேனும் ஒரு தொகுதியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.வை பதவி விலக செய்து அந்த தொகுதியில் போட்டியிட்டு பதவியைக் கைப்பற்றலாம்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது என்ற போதிலும், அவரும் மக்கள் மன்றத்தில் நின்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினராகவே இருக்க வேண்டும் என்பது மக்கள் விருப்பம். முறையான வழியைப் பின்பற்றாமல், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர் என்ற காரணம் கூறி பதவியில் அமர்வது நியாயமில்லை.

வார்தா புயல் பாதிப்பு, ஜல்லிக்கட்டு அவசர சட்டம், கடலில் கச்சா எண்ணெய் கலப்பு போன்ற விவகாரங்களில் நேரடியாக களத்தில் நின்று திறம்பட பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம் என்ன காரணங்களுக்காகவோ தாமாக முன்வந்து பதவி விலகுகிறார்.

காமராஜர், ராஜாஜி காலத்திற்குப் பிறகு எதிர்கட்சியில் உள்ளவர்கள் முதல்வரை மனமுவந்து பாராட்டுகின்றனர;. ஆனாலும், தலைமையைத் தக்க வைத்துக்கொள்ளவோ, மாற்று வழி குறித்தோ அவர் சிந்தித்தபாடில்லை.

காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மது ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, உயர் ரூபாய் நோட்டுகள் நீக்க நடவடிக்கையால் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில், தமிழகத்தை திறம்பட நிர்வகிக்க கூடிய நல்ல தலைமை தேவை. ஆனால், தமிழகத்தின் தலைமைப் பொறுப்பிற்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் உரிமை தற்போதைய நிலையில் மக்கள் கையில் இல்லை என்பதே உண்மை.