அதிகார போட்டியில் ஆளும் கட்சி

றக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசியலில் உட்கட்சிப்பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அதிமுகவில் ஜெ.அணி, ஜா. அணி என இரண்டு பிரிவுகள் உண்டாகி, கட்சிக்குள் பிளவை உண்டாக்கியது. தற்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி என இரு பிரிவுகள் மோதிக்கொள்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்குப்பின், எந்தவொரு சிக்கலும் இன்றி ஓ.பி.எஸ். முதல்வராக பதவியேற்ற நிலையில், தற்போது, ஓ.பி.எஸ்., சசிகலா மோதலால் கட்சிக்குள் பெரிய பிளவு உண்டாகியுள்ளது.

அதிரடியாக, பொதுச்செயலாளர் பதவிக்கு வந்த சசிகலாவால், முதல்வர் பதவியை அவ்வளவு எளிதாக கைப்பற்ற முடியவில்லை. பல்வேறு வழிகளில் அரசியல் சதுரங்கம் அரங்கேற, ஓ.பி.எஸ். அவர்கள் ராஜினாமா செய்து, சசிகலாவை முதல்வராக முன்மொழிய பிப்ரவரி 9ல் சசிகலா முதல்வராவார் என்ற நிலை உருவானது.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, முதல்வர் ஓ.பி.எஸ்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் 40 நிமிட தியானத்தில் அமர்ந்த பின், தான் ஜெயலலிதாவின் ஆன்மாவால் உந்தப் பட்டதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும் சசிகலாவுக்கு எதிராக பொங்கியெழுந்தார் .
இதுபோன்றதொரு சூழ்நிலையை சற்றும் எதிர்பாராத சசிகலா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தடம் மாறினால் முதல்வர் கனவு பலிக்காது என்பதால், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சொகுசுப் பேருந்தில் ஏற்றி, சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார்.

பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள். சசிகலாவுக்கு ஆதரவு நிலையில் நிற்க, முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், பொதுமக்களும் ஓ.பி.எஸ். பக்கம் நிற்கின்றனர். 
சட்டரீதியாக, சசிகலா முதல்வராக எல்லா முயற்சியும் எடுத்த நிலையில், தமிழக ஆளுநர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை. ஓ.பி.எஸ். அவர்களையும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வில்லை.

இந்நிலையில், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ளது. தீர்ப்புக்கு பின்னரே ஆளுநர் தரப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்ற னர். 

ஆளுங்கட்சிக்குள் அதிகாரப் போட்டி அதிகரித்துள்ள நிலையில், அரசு எந்திரம் ஸ்தம்பித்துப் போய்விட்டது. தமிழக அரசியலில் நிலையில்லா தன்மை ஏற்பட்டுள்ளது.