கானல் நீராய் கரைந்து போன, கனவில் கண்ட முதல்வர் பதவி

 
றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இணைபிரியா தோழியாக ஏறக்குறைய 30 ஆண்டுகளாக வலம் வந்தவர் வி.கே.சசிகலா.

1996 சட்டமன்ற தேர்தல் தோல்வியின் போது முதன்முறையாக சசிகலாவை ஒதுக்கிவைத்து, பின்னர் மீண்டும் தன்னுடன் தோழியாக இணைத்துக்கொண்டார் ஜெயலலிதா. 

அதன்பின்னர் 2011ல் இரண்டாவது முறையாக தனக்கும், தனது ஆட்சிக்கும் எதிராக சசிகலா குடும்பத்தினர் ஈடுபடுவதாக கூறி, போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டு, மன்னிப்பு கடிதம் வாயிலாக மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தவர் சசிகலா. 

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என பல தரப்பிலிருந்தும் குரல் எழும்ப, அதை அமைதியாகவே எதிர்கொண்டவர் சசிகலா. டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் என்ற செய்தி வெளிவரும் அதே வேளையில், அவசர கதியில் ஓ.பி.எஸ். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியும் வெளிவருகிறது.

ஜெயலலிதா மரணத்தின் துக்கம் மக்கள் மத்தியில் மறையும் முன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக, பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவே பொருத்தமானவர் என்ற கருத்தை மீடியாக்கள் மூலமாக பரவச் செய்கின்றனர். எதிர்பார்த்தபடியே பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம் செல்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, கட்சியும், ஆட்சியும் ஒருவர் வசமே இருக்க வேண்டும் எனவும், சசிகலாதான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்றும் தனது அடுத்த அஸ்திரத்தை எய்துகிறார். அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மொட்டையடிப்பதும், சசிகலாவை முதல்வராக முன்மொழிவதும் தொடர்கிறது.

வார்தா புயல் நிவாரணப் பணி, ஜல்லிக்கட்டு அவசர சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஓ.பி.எஸ். தனது முதல்வர் பதவியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுகிறார். 

ஜெயலலிதா ஆட்சியில், தன்னை மீறி யாரும் முதல்வரை சந்திக்க முடியாது என்ற நிலையிருந்தது. ஆனால், ஓ.பி.எஸ். ஆட்சியில் எல்லாமே தன்னை மீறி நடப்பதும், நற்பெயரை ஓ.பி.எஸ். பெறுவதும் பொறுக்க மாட்டாமல் அவரை ராஜினாமா செய்ய வைக்கிறார் சசிகலா.

அமைதியாக ராஜினாமா செய்த ஓ.பி.எஸ்., யாரும் எதிர்பாராத நேரத்தில் சசிகலாவிற்கு எதிராக பொங்கியயழுந்தார். கட்டாயப்படுத்தி ராஜினாமா, முதல்வர் பதவிக்கு அவமானம் உண்டாக்குதல் போன்ற செயல்களில் சசிகலா ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

இதனை சற்றும் எதிர்பாராத சசிகலா, ஓ.பி.எஸ்., திமுகவுடன் இணைந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி, உடனடியாக முதல்வர் பதவியைக் கைப்பற்றும் நோக்கில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை சொகுசுப் பேருந்தில் ஏற்றி, சொகுசு பங்களாவில் அடியாட்கள் பாதுகாப்புடன் தங்க வைத்தபின், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்திக்க, ஓ.பி.எஸ். தனது தரப்பு நியாயத்தை கவர்னரிடம் எடுத்துரைக்க, கவர்னர் அமைதி காக்கிறார்.

சசிகலா பொறுமை இழந்து காரசார பேட்டியளித்துக் கொண்டிருக்க, ஒரு சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ். ஆதரவு நிலையயடுக்கின்றர்.
இறுதியில், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்கிறது உச்ச நீதிமன்றம்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 கோடி ரூபாய் அபராதம், 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை என தீர்ப்பு வெளிவர, செய்வதறியாது திகைத்த சசிகலா உடனடியாக, எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக்கி, பின்புலமாக தான் செயல்பட வித்திடுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை ஆதரவு பெற்று முதல்வராக பதவியேற்பாரா? அல்லது ஓ.பி.எஸ். பெரும்பான்மையை நிரூபிப்பரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவியுள்ளது. 

இருவரில் ஒருவர் நாளை முதல்வர் நாற்காலியை எட்டிப்பிடித்துவிட வாய்ப்பு இருக்கிறது என்றபோதிலும், முதல்வர் பதவியை எட்டிப் பிடிக்கும் சசிகலாவின் கனவு கானல் நீராகிப் போனதும், எம்.ஜி.ஆர். துவக்கி, ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுக இன்று சசிகலாவால் பிளவுபட்டு நிற்கிறது என்பதும் முற்றிலும் உண்மை.