பதவியைத் தக்கவைத்தார் இ.பி.எஸ்.


ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததையடுத்து அடுத்த முதல்வ ராக பதவியேற்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அனைத்து முயற்சிகளும் எடுத்திருந் தார். 

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஓ.பி.எஸ்., சசிகலா தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக கூறினார். 

ஆட்சியமைக்க உரிமை கோரிய சசிகலாவை ஆளுநர் பதவியேற்க அழைக்காமல் இருந்தார். சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கு இதற்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா தண்டனையடைந்ததை தொடர்ந்து, அவரால் முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

ஆளுநர், எடப்பாடி பழனி சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் கோரினார்.

அதன்படி, நேற்று சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதிமுக ஓ.பி.எஸ். அணி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்த காரணத்தால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக கட்சியினர் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட, காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சிகள் யாருமின்றி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்களும், எதிராக 11 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. 

கடும் அமளிகளுக்களிடையே, பெரும்பான்மையை நிரூபித்து முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் இ.பி.எஸ்.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...