ஜனநாயகம் கேள்விக்குறியானது!மிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்கள் ஜனநாயகத்தை கேலிக்குள்ளதாகவும், கேள்விக்குறியதாகவும் உருவாக்கியுள்ளது. 

உடல்நலம் குன்றிய நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வருகிறது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இரண்டொரு நாட்களில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகிறது. ஆனால், அதற்கடுத்தடுத்த செய்திகளில் பல்வேறு காரணங்கள் வெவ்வேறு கோணங்களில் வெளிப்படுகிறது. 

அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அப்பல்லோ மருத்துவமனை வாயிலில் ஜெயலலிதாவை காண தவமாய் தவமிருக்கிறார்கள். முக்கிய நபர்கள் தவிர வேறு யாரும் மருத்துமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

மத்திய அமைச்சர்கள், தமிழக ஆளுநர், எதிர்க்கட்சி தலைவர்கள் என ஒவ்வொருவராக அப்பல்லோ வந்து செல்கின்றனர். அவர் விரைவில் நலமடைந்து வீடு திரும்புவார் என்ற ஒத்த கருத்தை முன்வைத்தவர்கள் எவருமே அவரை நேரிடையாக சந்திக்க முடியவில்லை. காரணம் என்ன?

அரசு நிர்வாகத்தை யார் கவனிப்பது? முதல்வருக்கு இணையான அதிகாரத்தில் இருந்து செயல்படுவது என்ற யார் என்ற எந்த தகவலும் அரசு தரப்பில் இருந்து வரவில்லை.

ஆட்சி அதிகாரம் ஸ்தம்பித்து இருந்த நிலையில், டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மரணம் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகிறது. அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் ஜெயலலிதா மரணம் என்ற செய்தி தவறானது என்று மறுப்பு செய்தி வெளியாகிறது. அரைக்கம்பத்தில் பறந்த கட்சி கொடி மீண்டும் மேலேறுகிறது.

ஒட்டுமொத்த தமிழகத்தையே பரபரப்பிலும், பதட்டத்திலும் ஆழ்த்திய பின்பு, டிசம்பர் 5 நள்ளிரவு ஜெயலலிதா மரணமடைந்தார் என்று அப்பல்லோ சார்பில் அறிக்கை வெளியாகிறது. 

ஜெயலலிதா விரும்பினால் வீடு திரும்பலாம் என்று அப்பல்லோ தலைவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்த ஓரிரு நாட்களில் ஜெயலலிதா மரணம் என்ற செய்தி வருகிறது. (ஏன் இந்த முரண்பாடு?)

75 நாட்களாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு உண்மையில் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் மருத்துவமனையில் எந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான விளக்கம் இரண்டு மாதங்கள் வரை வெளியிடப்படவில்லை. சசிகலா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வர் பதவியை நெருங்கும் நிலையில், மருத்துவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. (தாமதமாக விளக்கம் அளிக்க வேண்டியதன் பின்னணி என்ன?)

ஜெயலலிதா மரணத்திற்குப் பின் இரவோடு இரவாக புதிய முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். (ஏன் அவசர கதியில் இப்படியொரு நிகழ்வு?)

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழும்பி அடங்குவதற்குள், கட்சியை தனது வசமாக்க சசிகலா எல்லா ஏற்பாடுகளும் செய்கிறார். ஓ.பி.எஸ். உட்பட அமைச்சர்கள் அனைவரும் சசிகலா பொதுச்செயலாளர் பதவியேற்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். சில நாட்கள் இடைவெளியில் கட்சியினர் கேட்டுக்கொண்டதால் பொதுச்செயலாளர் பதவியேற்பதாக சசிகலா அறிவிக்கிறார். அதற்கடுத்த சில நிகழ்வுகளில் சசிகலாவை முதல்வராக்க அமைசசர்கள் தரப்பு பல்வேறு வழிகளை கையாள, ஓ.பி.எஸ். தனது பதவியை ராஜினாமா செய்கிறார். 

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்திக்கிறார் சசிகலா. பிப்ரவரி 9ல் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என்ற நிலையில், சசிகலா தரப்பினர் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என்று ஓ.பி.எஸ். அதிரடியாக குற்றச்சாட்டை முன்வைக்க, தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. (முதல்வருக்கே இப்படியொரு நிலையா? என்று அனைத்து தரப்பிலிருந்தும் கேள்வி)

தமிழக ஆளுநர் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்காமல் நாட்களை கடத்த, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பறிபோய்விடக்கூடாது என்று, அனைத்து எம்.ஏ.க்களையும் சொகுசு பங்களாவில் பத்திரப்படுத்தி வைக்கிறார் சசிகலா. (ஆதரவு இருக்கும் பட்சத்தில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன?)

சசிகலா தரப்பினர் ஆளுநர் அழைப்பிற்காக காத்திருக்க, ஆளுநர் சசிகலா மீதாக சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். 

தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக அமைய, உடனடியாக சிறை செல்ல வேண்டிய கட்டாய நிலையில், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்து, முதல்வர் பதவிக்கு அவரை தயார்படுத்திவிட்டு சிறை செல்கிறார் சசிகலா.

ஒருவழியாக, ஆளுநர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்து, பதவிப்பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் நுழைய வேண்டிய கட்டாயத்தில், உடனடியாக சட்டமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டப்படுகிறது. (பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் இருக்கும் போது ஏன் இந்த அவசரம்? )

எதிர்கட்சியினரின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை நிராகரிக்க, சட்டசபை அமளி, துமளியாக கிழிந்த சட்டையுடன் வெளியேறுகிறார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின். எதிர்க்கட்சியினர் எவரும் இன்றி, சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்த, பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி காண்கிறார் எடப்பாடி பழனிசாமி. (எதிர்கட்சியினர் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் எதிர்கட்சியினர் இன்றி வாக்கெடுப்பு நடத்தியது முறையா?)

ஆட்சி அதிகாரத்தை சசிகலா தரப்பினர் கைப்பற்றிய நிலையில், ஓ.பி.எஸ். தரப்பினர் மறு வாக்கொடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை வைக்கின்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் பொதுமக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க வழி தெரியாமல் சட்டமன்ற விடுதியில் ஐக்கியமாகிவிட்டனர். (மக்கள் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களை சந்திக்க முடியாமல் முடங்கிப்போவது எவ்வகையில் நியாயம்?)

அடுத்தடுத்து என்னென்ன நிகழ்வுகள் நடக்கவிருக்கின்றன என்ற கேள்விகளுடன் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.