இரட்டை இலை யாருக்கு சொந்தம்?

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. 

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து உரிய விளக்கம் தரப்படவில்லையயன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். அரசியலில் நுழைவது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். அவரது அறிவிப்புக்குப் பின் அவரது இல்லம் நோக்கி கட்சித் தலைமை சசிகலாவிடம் செல்வதை விரும்பாத அதிமுக தொண்டர்கள் படையயடுத்தனர். 

ஓ.பன்னீர்செல்வம் கட்டாயத்தின் பேரிலேயே தான் ராஜினாமா செய்ததாக அறிவித்ததை தொடர்ந்து உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்தது. தீபாவை நோக்கி சென்ற தொண்டர்கள் ஓ.பி.எஸ். பக்கம் தங்கள் பார்வையை திருப்பினர். 

ஓ.பி.எஸ். உடன் தீபா இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் வெளிவந்த போது அமைதியாக இருந்த தீபா, பின்னர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், தீடீரென தனது முடிவிலிருந்து பின்வாங்கி, ஜெயலலிதா பிறந்த நாளான நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்றும் அரசியல் அமைப்பை தொடங்கியுள்ளார். 

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக தான் இருக்க வேண்டும் என்ற தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என்றும், அதிமுக தொண்டர்களுடன் இணைந்து இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்றும் தீர்மானித்திருப்பதாக கூறுகிறார் தீபா.

ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா என இருவர் இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடி வரும் அதே நேரத்தில், ஜெயலிதாவின் அண்ணன் மகள் என்று தீபாவும் அவர்களுடன் இணைந்துள்ளார்.

இரட்டை இலையை வெற்றி கொள்வது யார் என்ற போட்டியின் விடை கூடிய விரைவில் தெரிந்துவிடும் என்று நம்புவோமாக!