உள்கட்சி குழப்பத்தில் அதிமுக


திமுக ஓ.பி.எஸ். அணியும், அதிமுக சசிகலா அணியும் இணைவதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் இணையும் பட்சத்தில் யாருக்கு எந்த பதவி என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பதவியை விட்டுத் தருவதில் எடப்பாடி பழனி சாமிக்கு விருப்பமில்லை, அவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால், கொங்கு மண்ட லத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். கட்சிக்கு ஓ.பி.எஸ். அவர்களும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என்பதும் சசிகலா அணியினரின் விருப்பம். 

ஜெயலலிதாவால் முன்னிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். அவர்களுக்கே கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் பதவி வேண்டும் என்கின்றனர் ஓ.பி.எஸ். அணியினர். ஆனால், ஓ.பி.எஸ். அவர்களுக்கு நிதியமைச்சர் பதவியைத் தருவது மட்டுமே சசிகலா அணியினரின் விருப்பமாக உள்ளது. 

இரண்டு அணியினருக்கும் பதவியைப் பெறுவதில் போட்டி நிலவுவதால், யாருக்கு எந்த பதவி என்பதில் இழுபறி நீடிக்கிறது. 

அதுமட்டுமின்றி, பொதுச் செயலாளர் பதவியைப் பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இருவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இரு அணிகளுக்கிடையேயான இணைப்பு நடைபெற்றால் இரட்டைஇலை சின்னத்தைப் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதாலேயே, அதிமுக இணைப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. ஆனால், பதவியைப் பெறுவதில் போட்டி நீடித்தால் இரு அணிகள் இணைப்பு என்பது சாத்தியமாகாது. 

மேலும், ஆளும் கட்சியில் தொடர்ந்து நீடித்து வரும் உட்கட்சிப் பூசலால், அரசுப் பணிகள் முடங்கிப்போயுள்ளது. இதே நிலை நீடித்தால், இனி வரும் தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்பது கேள்விக்குறியாகும் நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.