இது மக்களுக்கான ஆட்சியா?

 அரசியல் வெற்றிடம் நிரம்பியதா?

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி எழும் முன்னர், இரவோடு இரவாக ஓ.பி.எஸ். அவர்கள் பதவியில் அமர்த்தப்படுகிறார். கட்சியை யார் வழிநடத்துவது என்ற கேள்விக்கு வழியே இல்லாமல், சசிகலா முன்மொழியப்பட்டு, பொதுக்குழு கூடி பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்படுகிறது. 

கட்டாயத்தின் பேரில் ஓ.பி.எஸ். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறி புதிய அதிமுக அணியை உருவாக்குகிறார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை நோக்கி சசிகலா நகரவிருக்கிறார் என்ற நிலையில், நீதிமன்ற தீர்ப்பு அவரை சிறைக்கு அனுப்புகிறது. அடுத்த முதல்வர் யார் என்று தமிழகமே ஆவலுடன் காத்து நிற்க, ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமியும், கட்சிக்கு டிடிவி தினகரனும் சசிகலாவால் அமர்த்தப்படுகின்றனர்.


பணபலத்தால் வந்த வினை

ஆர்.கே.இடைத்தேர்தலை மையமாக வைத்து டிடிவி தினகரன் முதல்வர் பதவிக்கு அடித்தளமிடுகிறார் என்ற செய்தி பரவிக் கொண்டிருக்க, கட்சி பாகுபாடு இல்லாமல் ஆர்.கே.நகரில் பணம் கரை புரண்டோட, இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடும் போட்டியில், ஓ.பி.எஸ். அணியும், சசிகலா அணியும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத விதமாக இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைதாகிறார். 


சின்னமும் வேண்டும்! சின்னம்மாவும் வேண்டும்!

இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும்; சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைக்காமல் இரு அணிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது போன்ற சூழ்நிலையில் எடப்பாடி தரப்பினர் உள்ளனர். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கினால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு சாத்தியம் என்கின்றனர் ஓ.பி.எஸ். அணியினர். இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நீடிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 

மக்களுக்கான ஆட்சியா?

ஜெயலலிதா மருத்துவமனை சென்றது முதல் இன்று வரை தமிழக அரசியல் களத்தில் சடுகுடு ஆட்டம் போல் கட்சி, ஆட்சி, பதவி என தள்ளாட்டம் கண்டு கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வறட்சி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது என்பது உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், ஜெயலலிதாவை முன்மாதிரியாக கொண்டு செயல்படுவதாக கூறிக் கொள்ளும் அதிமுக அரசு, "மக்களால் நான், மக்களுக்காக நான்" என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை மறந்து கட்சியையும், பதவியையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே முனைப்போடு செயல்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தி அலையை உருவாக்குகிறது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.