ரஜினியின் அரசியல்!

அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலும், அவர் அரசியலுக்கு வரவே வேண்டாம் என்று தமிழகத்தின் விருப்பமாக தற்போது இருக்கின்ற போதும், எப்போதும் போல், வர வேண்டிய நேரத்தில் வருவேன் என்பதுதான் ரஜினியின் கருத்தாக உள்ளது.

பாட்ஷா பட விழாவில், தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டது என்று கூற, அதன் பிறகு நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர் அரசியல் அவதாரம் எடுப்பார் என்றே பலரையும் நினைக்க வைத்தது. 

ஆனால், நான் எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன் என்று சினிமா பஞ்ச் வசனங்களை பேசியே ரசிகர்களை குழப்பத்தில் வைத்திருந்தார்.

விரைவில் எந்திரன் 2.0 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை வழக்கம் போல தனது பாணியில் கூறியுள்ள நிலையில், அவர் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 

இன்று நான் நடிகனாக இருக்கிறேன், நாளை எதுவென்று ஆண்டவன் முடிவு செய்வான் என்கிறார் ரஜினி. அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் ஒதுங்கிவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இது அவர் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்பதைக் காட்டும் கருத்தல்ல. 

பொதுவாக, எல்லா தரப்பு மக்களுக்கும் நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. அவரவர் பாதையில் அவரவர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராதவிதமாக ஏதாவது நடந்தால் மட்டுமே, அவர்களது வாழ்க்கைப் பாதையில் மாற்றம் ஏற்படும். அதே போன்று தான் ரஜினியும். இன்று நான் நடிகன். நாளை எதுவென்று தெரியாது என்று கூறுவது பொதுவான கருத்துதான்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் திரையில் அவரது புகழ் மங்கத் தொடங்கும் காலத்தில் அரசியல் பிரவேசம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே, அரசியலுக்கு வர மாட்டேன் என்று உறுதியாக கூறவும் முடியாது. கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டு பின்னர் முடியாது என்று ஒதுங்கினாலும் இந்த உலகம் அவரை இகழும். 

ஆண்டவனுடனும் மக்களுடனும்தான் கூட்டணி என்று உறுதியாக கூறிய விஜயகாந்த், தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டுமானால் தனித்து போட்டி என்பது சாத்தியமில்லை என்ற நிலையில், பல சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார். 

தனித்துப் போட்டி என்ற மனநிலையில் இருந்து அவர் மாறிய காரணத்தினால் இன்று அவர் அரசியலில் இருந்தே புறந்தள்ளப்பட்டிருக்கிறார். வானிலை மாறுபாடு போன்று அரசியலிலும் அன்றாடம் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். ஸ்திரத் தன்மையோடும், கொள்கைப் பிடிப்போடும் இங்கு அரசியல் செய்ய யாரும் இல்லை. இனி அப்படியயாருவர் வரப்போவதும் இல்லை. 

ஜனநாயக நாட்டில் அரசியலில் பங்கெடுக்க அனைவருக்கும் உரிமை உள்ளது போன்று, தகுதியானவரை தேர்ந்தெடுக்கவும், புறந்தள்ளவும் மக்களிடம் உரிமை உள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வீண் விவாதங்களையும் தவிர்க்கவும் வேண்டும்.