முதலீட்டுக்கு பாதுகாப்பு தரும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள்


இன்றைய வாழ்க்கைக்கும், நாளைய வாழ்க்கைக்கும் மட்டுமல்ல; வருங்கால சந்ததிகளுக்கும் பயன் தரக்கூடியது சேமிப்பு மட்டுமே. சேமிப்பு என்பது பாதுகாப்பு என்பதையும் தாண்டி லாபம் தரத்தக்கதாகவும் இருக்க வேண்டும். எத்தனையோ முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மூத்த குடிமக்கள், ஏழை, எளிய மக்கள், கிராமப்புறத்தினர் அஞ்சலகங்களையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். முதலீட்டுக்கு பாதுகாப்பு, கூடுதல் வட்டி என்பதே அஞ்சலக சேமிப்பின் சிறப்பு.


தற்போது நடைமுறையில் உள்ள அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்காக....
அஞ்சலக சேமிப்பு கணக்கு:   வங்கி  சேமிப்பு கணக்கைப் போலவே அஞ்சலகங்களின் சேமிப்பு கணக்கு துவங்கலாம். குறைந்தபட்ச இருப்பு தொகை 20 ரூபாய் என்பது எல்லோராலும் சாத்தியமாக கூடியதே. செக் புக் வசதி வேண்டுபவர்கள் 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும்.

வங்கியை போலவே தனிநபர் கணக்கு அல்லது ஜாயிண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு கணக்காகவும் சேமிப்பு கணக்கு  துவங்கலாம். வருட வட்டியாக 4% வழங்கப்படுகிறது.

ரெக்கரிங் டெபாசிட் :  ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் மாதாந்திர தொடர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சமாக  மாதம் மாதம் 10 ரூபாய் வீதம் சேமிக்கலாம். வருட வட்டியாக 7.4% வழங்கப்படுகிறது. 

வருங்கால வைப்பு நிதி கணக்கு:  இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். இத்திட்டதின் மூலம் பெறும் வட்டி லாபத்திற்கு வருமான வரி கிடையாது.  மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், முதலீட்டின் மீது கடன் பெறும் வசதியும் உண்டு.

தேசிய சேமிப்பு பத்திரம்:  8.1 சதவீதம் வரை வட்டியும்,  வருமான வரியில் இருந்து வரி விலக்கும் பெறலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் :   8.6 சதவீதம் வரை வட்டியம்,  வருமான வரியில் இருந்து வரி விலக்கும் பெறலாம். மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் இது.

கிசான் விகாஸ் பத்திரம் :   110 மாதத்தில் முதலீடு இரட்டிப்பாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு முதலீட்டை திரும்ப பெறலாம். வேறு ஒரு நபருக்கு மாற்றம் செய்யும் வசதி உண்டு. 

செல்வ மகள் திட்டம் : 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை தொடங்கலாம்.