இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற அன்னிபெசண்ட் அம்மையார்

Annie Besant ன்னிபெசண்ட் அம்மையார் என்று அழைக்கப்படும் இவரது பெயர் அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant). கிறிஸ்தவராக பிறந்து, மூடப்பழக்கவழக்கங்களுக்கெதிராக குரல் கொடுத்து,  இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாக நின்று, இந்து மத ஈடுபாட்டின் காரணமாக இந்துவாகவே வாழ்ந்தவர்.

அக்டோபர் 1, 1847 ஆம் ஆண்டில் லண்டனில் பிறந்தவர். ஐந்து வயதில் தந்தையை இழந்தார். 

இவரது கணவர் பிராங்க் பெசண்ட் இவரை  கோயிலுக்குச் செல்லும் படியும், கிறிஸ்தவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னிபெசண்ட் கணவரிடமிருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார்.  1867ம் ஆண்டில் துவங்கிய  அவரது திருமண வாழ்க்கை 1873ல் முடிவுக்கு வந்தது. 

மூடப்பழக்கவழக்கங்களுக்கெதிராகப் பரப்புரையை ஆரம்பித்தனால் மத சமூகத்தினரின் எதிர்ப்புக்கு ஆளானார்.

1889 ஆம் ஆண்டில் The Secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிசில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. இது அன்னி பெசண்டின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினராகி, பிளேவட்ஸ்கி மரணத்திற்கு பிறகு பிரும்மஞானத்தில் ஒரு முக்கிய புள்ளியானார். 

1893 ஆம் ஆண்டில் பிரும்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்த அன்னி பெசண்ட், சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக 'காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையும், 'நியூ இந்தியா' என்ற பெயரில் நாளேடு ஒன்றையும்  நடத்தினார். இதன் மூலம் அவர் அரசியலில் இழுக்கப்பட்டார்.

1907 ஆம் ஆண்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். 

ஹோம் ரூல் (சுயாட்சி) இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார். 

டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பான கருத்துக்கள் அன்னி பெசண்டின் கொள்கைகளுக்கு உரியதாக இல்லாததால், அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரராமல் காங்கிரசில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் இந்திய விடுதலையில் முழு ஈடுபாடு காட்டி வந்தார்

தனது 81-வது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகி, பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். 

1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ல் சென்னை, அடையாறில் அன்னி பெசண்ட் காலமானார். 

சென்னை அடையாறில் உள்ள பிரும்மஞான சபை இன்றும் அவர் புகழுக்கு சாட்சியாக விளங்குகிறது.