ஆர்.கே. நகர் தேர்தல்; மீண்டு(ம்) வருமா அ.தி.மு.க.?

ஜெயலலிதா மரணத்திற்குப் பின் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி கடந்த ஓராண்டாக காலியாக இருந்துவந்தது. இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கட்டுக்கடங்காத பண விநியோகம் காரணமாக, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். என பிளவு ஏற்பட்டது. அத்துடன் தினகரன் தரப்பினர் தனியே அ.தி.மு.க.வுக்கும், இரட்டை இலை உரிமை கோரி போராடி வந்தனர்.

இந்நிலையில், ஒ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி ஒன்றிணைந்து, இரட்டை இலையை மீட்க முயற்சித்தனர். இரட்டை இலை சின்னம் இல்லாமல் இடைத்தேர்தலும் இல்லை; உள்ளாட்சித் தேர்தலும் இல்லை என உறுதியாக இருந்தனர்.

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் அணிக்கு ஒதுக்கினர். இரட்டை இலை கிடைத்த மகிழ்ச்சியை அதிமுகவினர் கொண்டிடாடி வரும் நேரத்தில், ஆர்.கே. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது.

இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது கடந்த கால அரசியல் வரலாறு. ஆனால், இம்முறை, ஜெயலலிதா இல்லாத அதிமுகவும், கருணாதியின் நேரடி ஈடுபாடு இல்லாத தி.மு.க.வும் தேர்தலில் களம் காண்கின்றன. மேலும், பலம் குறைந்த நிலையில் இருந்தாலும், தினகரன் அதிமுகவிற்கு எதிராக போட்டியிடுகிறார். இது நிச்சயம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை இத்தேர்தல் வெற்றி / தோல்வி எவ்வித பாதிப்பைçயும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், இத்தேர்தல் வெற்றியைப் பொறுத்தே அ.தி.மு.க.வின் வருங்காலம் நிர்ணயிக்கப்படும். 

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக மக்கள் செல்வாக்கை தக்கவைக்குமா அல்லது இழந்துள்ளதா என்பதை இத்தேர்தல் வெற்றியே தீர்மானிக்கும்.

அதிமுக மீண்டும் ஆர்.கே. நகரை தக்கவைக்குமா? தேர்தல் முடிவு விடை சொல்லும்.