கடுகு.காம்
- Kadugu.Com
அரசியல்
தமிழ்! தமிழ்
தமிழ்! தமிழ் என ஊரெல்லாம் கூவிக் கூவி விற்கிறார்களே, இவர்கள் தமிழுக்கு இதுவரை என்ன செய்து கிழித்து விட்டனர்?
தமிழுக்கு செம்மொழி உரிமை வாங்கித் தந்ததன் பயன் என்ன? தமிழக நீதிமன்றங்களிலேயே தமிழில் வழக்காடும் உரிமை இதுவரை இல்லை. சொந்த மொழி, சகோதர மொழி ஆகியவற்றை மறந்து அன்னிய மொழியாம் ஆங்கிலத்திலேயே தமிழன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய அவலம். எங்கெங்கு கேட்பினும், "ஹாய், ஹவ் ஆர் யூ, மம்மி, டாடி" தான். கேட்டால், காலத்தின் கட்டாயம், பொருளாதார முன்னேற்றத்தின் விளைவு, உலகமயமாக்கல் என்றால் இப்படித்தான் ஆகும் என அறிவுஜீவிகளின் விளக்கம் வேறு. ஆங்கிலத்தை சிவப்புக் கம்பளம், ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும் நமது அரசியல்வாதிகளுக்கு தேசிய மொழியாம் இந்தி மட்டும் அன்னியம் ஆகியதன் காரணம் என்ன?
அக்காரணம் ஒன்றும் பெரிய மர்மம் இல்லை. நமது தமிழக அரசியல்வாதிகளுக்கு அந்தந்த காலகட்டங்களில் மக்களின் ஓட்டு வங்கியை சூறையாட சிற்சில காரணங்கள் தேவைப்பட்டன. அந்தக் காரணங்கள் எவையும் உறுதியான அடிப்படைக் காரணங்களோ/தேவைகளோ அல்ல. அவையனைத்துமே ஜோடிக்கப்பட்ட காரணங்களே. "சுயமரியாதை, தமிழ் உணர்வு, மானம், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு" ஆகியவை சில எடுத்துக்காட்டுகள்.
{சுயமரியாதைத் திருமணங்கள் ஒரு காலத்தில் ஓஹோ என நடந்து கொண்டிருந்தன. தினமும் செய்தித்தாள்களில் அது பற்றிய தகவல்கள் வரும் முன்பெல்லாம். ஆனால் இப்போது அதெல்லாம் கிட்டத்தட்ட கிடையவே கிடையாது. அப்படியே நடந்தாலும் தினசரிகளில் அதெல்லாம் போட இடம் கிடையாது. எந்த நடிகையின் தொப்புள் பெரியது என கருத்துக் கணிப்புதான் இவர்கள் நடத்தும் தினசரி, வார இதழ்களில் பிரதானமாக இடம் பெற்றிருக்கும். கேட்டால், கொள்கை வேறு - தொழில் வேறு என குரைப்பார்கள்.
இந்த மாதிரி காரணங்களை கருப்பொருளாகக் கொண்டு அரசியல்வாதிகள் மேடை தோறும் முழங்கினர். தமிழன் வாயைப் பிளந்து (கெ)கேட்டுக் கொண்டிருந்தான். அபாரம்! அபாரம் எனக் கை தட்டி மகிழ்ந்தான்.}
அப்படி என்ன தமிழுணர்வை இவர்கள் ஊட்டி வளர்த்து விட்டனர்? இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலத்தை அல்லவா நம் மீது திணித்து விட்டனர். தமிழ்! தமிழ்! என முழங்கிய இவர்கள் தான் சன் டிவி, கே.டிவி என நடத்துகின்றனர். பெயராவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் இவர்களின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகளின் தமிழ் ஒன்றே போதும் தமிழைக் குழி தோண்டிப் புதைக்க. கேட்டால் வழக்கம் போல அது வியாபாரம், இது அரசியல் - அதையும் இதையும் கலக்கக் கூடாது என பதில் காட்டமாக வரும். இவர்கள் அரசு தயாரிக்கும் பொருட்களில் கூட தமிழில் தகவல்கள் இல்லை. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற சட்டமே உள்ளது, ஆனால் அது போன்ற பெயர்ப்பலகைகளை 78 இலட்சம் பேர் வசிக்கும் சென்னை மாநகரில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த சட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதை இவர்கள் சற்று கவனித்திருந்தாலே தமிழ் ஓரளவு பெயர்ப்பலகை அளவிலாவது இருந்திருக்கும்.
============================================