கட்டுரைகள்

தமிழனின் அடையாளம்

03-04-2008 : சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் எதிர்ப்புறம் நாளை உண்ணாவிரதப் போராட்டம். தமிழ் நடிகர் நடிகையர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்கப் போகிறார்களாம்.

நாளைக்கு இல்லாத களேபரம் எல்லாம் நடக்கும் சேப்பாக்கம் பகுதியில். அப்பாவித் தமிழன் கர்நாடகாவில் நிம்மதி இல்லாமல் தவிப்பான். சிங்காரச் சென்னையில் அண்ணாசாலையில் வாகனங்கள் நெருக்கடியில் சிக்கும். நமது வெள்ளித்திரை நாயகர்களும் தமிழே பேசாத கனவு நாயகிகளும் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்து தமது எதிர்ப்பைத் தெரிவிப்பார்களாம்.

காரணம் என்ன? கர்நாடகாவில் தற்சமயம் பெரிதாக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் பிரச்சினையின் பின் விளைவு தான்.

இவர்கள் என்ன தமிழர்களுக்காக, தமிழர்களின் பிரச்சினைக்காகவா குரல் கொடுக்கிறார்கள்..? இல்லவே இல்லை. கர்நாடகாவில் இவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நிலை நீடித்தால் என்ன செய்வது? (திரைப்படங்கள் வினியோகம் செய்யப்படும் போது, மாவட்ட வாரியாகவும், மாநில வாரியாகவும் விலை பேசப்படுகின்றன‌. அதிக‌ விலை போவ‌து த‌மிழக‌ வினியோக‌ உரிமை, அடுத்து ஆந்திரா, க‌ர்நாட‌கா, கேர‌ளா ஆகும்) க‌ர்நாட‌காவில் "த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு நிரந்தர தடை" என்று க‌ன்ன‌ட‌ அமைப்புக‌ள் ஏதாவது குண்டைத் தூக்கிப் போட்டு விட்டால் என்ன‌ செய்வ‌து? அது தான் இவ‌ர்க‌ளின் க‌வ‌லை. இவர்களின் வியாபாரம் படுத்து விடக்கூடாது, அதற்காக தமிழ்ப்படங்களை திரையிட எதிர்ப்பு எழுந்தவுடன் இவர்களுக்கு இடிக்கிறது பாருங்கள்.

இவ‌ர்க‌ளுக்கோ, இவ‌ர்க‌ளின் தொழிலுக்கோ ஒரு பிர‌ச்சினை என்றால் இப்ப‌டிக் கூடி ந‌டிக்கிறார்க‌ளே. இன்றும் தொட‌ரும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ப‌டுகொலையை எதிர்த்து ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால், இல்லை. தமிழன், தமிழ் என்றெல்லாம் குரல் விடும் இவர்களுக்கான அடைமொழிகளைப் பாருங்கள்... சூப்ப‌ர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், யுனிவ‌ர்ச‌ல் ஹீரோ, ஆக்ஷ‌‌ன் கிங், அல்டிமேட் ஸ்டார், கேப்டன்.............

கடைக்கோடித் தமிழன் தனது நடிக தலைவனின் பிறந்த நாளுக்கும், புதிய திரைப்பட வெளியீட்டுக்கும் அவனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து புளகாங்கிதம் அடைகிறான். மெத்தப் படித்து லகரங்களில் சம்பளம் வாங்கும் ஐ.டி காரன் "ரிலீசான அன்னிக்கே ஐநாக்ஸ்லே பார்த்துட்டேன், அப்புறம் டவுன்லோட் பண்ணி மூணு தடவை பார்த்துட்டேன், சிம்ப்ளி சூப்பர்ப்" என்கிறான். இது தான் தமிழகம், தமிழனின் பண்பாடு அடையாளம்.

 ====++++====