கட்டுரைகள்

அடிவருடி அடிமைகள்

செய்தி : நியூயார்க், பிப்ரவரி : 25-02-2008 : அமெரிக்க அரசில் உயர் பதவி ஒன்றை பெற வேண்டும் என ஆசைப்படுவதாக‌ பெப்சி நிறுவனத்தின் தலைவரான வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி இந்திரா நூயி பார்ச்சூன் எனும் ப‌த்திரிக்கைக்கு அளித்த‌ பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக அமெரிக்க அமைச்சருக்கு சமமான முக்கிய பதவி கிடைக்கலாம் என‌ அவருடைய நண்பர் ஹென்றி கிசிங்கர் கூறுகிறார் என்றும், அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலோட்ட‌மாக‌ப் பார்த்தால் இது ஒரு சாதார‌ண‌ செய்தி போல‌த் தோன்றும். இது போன்ற‌ செய்திக‌ளையும் அவ‌ற்றின் பின் நிக‌ழும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் ச‌ற்றே பொருத்திப் பாருங்க‌ள் ப‌ல கேவ‌ல‌மான‌ செய்திக‌ள் உங்க‌ளுக்குக் கிடைக்கும்.
 

நன்றி :  tamilcircle.net
 

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இங்குள்ள மக்கள் அப்படியே ஆடிப் போய்விட்டார்கள். கருணாநிதி தலைமையில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு துக்கம் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியரின் உறவினர்கள் அன்னாரது இறுதி சடங்கில் கலந்து கொள்ள, அரசே விசாவுக்கு ஏற்பாடு முதலிய முறைவாசல் வேலைகளை சிரமேலிட்ட பணியாய் செய்து கொடுத்து இலவசமாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர், ஏதோ அவர்கள் காசில்லாத பிச்சைக்காரர்கள் போல‌.

கோவையிலும் கான்பூரிலும் படித்து விட்டு அமெரிக்கா போய், இருபத்தைந்து ஆண்டுகளுகளுக்கும் அதிகமாக அங்கேயே வேலை செய்து, குடும்பம் நடத்தி, அங்கேயே அடங்க விரும்பியவர் லோகநாதன். அவ‌ர‌து உட‌லைக் கூட‌ இங்கு கொண்டு வந்து அடக்கம் செய்யும் எண்ண‌மில்லை, அவ‌ரைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு.  அப்ப‌டிப்ப‌ட்ட‌ நாட்டுப்ப‌ற்று.

அமெரிக்காவின் போர்வெறி நாசா அனுப்பிய விண்கலம் வெடித்துச் சிதறிய விபத்தில் கல்பனா சாவ்லா மாண்டபோது ஜான்சிராணியோடு அவரை ஒப்பிட்டுப் போற்றி நாடே கண்ணீர்க்கடலில் மூழ்கியது.  இவரது பெய‌ரில் விருது வேறு அர‌சாங்க‌த்தினால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ருகிறது.

மேற்குறிப்பிடப்பட்டவர்களின் சொந்த ஊரிலும் சொந்த மாநிலத்திலும் இவர்கள் கற்ற கல்வியகங்களிலும் இவர்கள் ஏதோ தாய்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, மேட்டிமையைக் காப்பதற்கான போராட்டத்தில் தமது உயிர்த் தியாகம் செய்தவர்களைப்போல் மேலான அஞ்ச‌லி செலுத்த‌ப்ப‌ட்ட‌து. கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவர்கள் காண்போர் மனங்கரையும்படி துக்கம் கடைப்பிடித்துப் பரப்பினர்.

ந‌ம்ம‌வ‌ர் என்ற‌ முறையிலும் மனிதாபிமான அடிப்படையிலும் இவ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌ம் வ‌ருத்த‌த்துக்குரிய‌தே. ஆனால் இத‌ற்கு இவ்வ‌ளவு முக்கிய‌த்துவ‌மும் விள‌ம்ப‌ர‌மும் தேவையா. அர‌பு நாடுக‌ளில் விப‌த்திலும், முதலாளிமாராலும் உயிரிழ‌க்கும் ந‌ம‌து உழைக்கும் வ‌ர்க்க‌ம் ப‌ற்றி நான்கு வ‌ரிக‌ளில் வ‌ரும் செய்திகள் கூட‌ க‌டைசிப் ப‌க்க‌த்தில் இட‌த்தை நிர‌ப்ப‌வே வெளியிட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஏன் இந்த‌ பார‌ப‌ட்ச‌ம்? அரேபியப் பாலைவனத்தில் செத்து, சவப்பெட்டியிலேயே அனாதைப் பிணங்களாக‌ அழுகி நாறும் தொழிலாளிகளை தாயகம் கொண்டு வரவும், சிங்கப்பூர், மலேசியாவில் சிறைகளில் வாடும் தொழிலாளிகளை மீட்பதற்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது அரசாங்கம்; தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க நாதியில்லை இங்கே.

சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலம் நல்லபடியாக தரையிறங்க இந்திய தேசியக் கொடியையும், மெழுகுவர்த்தியையும் கையிலேந்தி பள்ளிக் குழந்தைகள் பிரார்த்தனை செய்தவாறு இருக்கும் புகைப்படத்தை செய்திதாள்கள் முதல் பக்க செய்தியாக வெளியிட்டு பரபரப்பூட்டின. காரணம், அவர் இந்திய வம்சாவளி, இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறாராம். சுனிதா வில்லியம்ஸின் தந்தை மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவர். தாய் கூட வேற்று நாட்டவரே. சுனிதா வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்தது அனைத்தும் அன்னியச் சீமையிலேதான்.

சில வருடங்களுக்கு முன்னால், இந்திய வம்சாவளி மனோஜ் சியாமளன் இயக்கிய திரைப்படம் பரபரப்பாக ஓடி, ஆஸ்காருக்கு தேர்வாகியபோது, நம்மூர் பத்திரிகைகள் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி ம‌க்க‌ளை புள‌காங்கித‌ப்ப‌டுத்தின‌.

புதுச்சேரியில் மனோஜ் சியாமளன் பிறந்தார் அவ்வளவுதான். வாழ்வு அமெரிக்காவில்தான். இந்திய திரைப்படங்களை இயக்குவீர்களா என்ற கேள்விக்கு "இந்திய ரசனைக்கு ஏற்றவாறு என்னால் திரைப்படங்களை இயக்க‌ முடியாது" என்று பதிலிறுத்தவர் அவ‌ர்.

பாபி ஜிந்தால் எனும் பஞ்சாபி ஒரு அமெரிக்க மாநிலத்தின் ஆளுநராக வெற்றி பெற்ற போது அவரது மொத்த கிராமமும், பஞ்சாபும் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்தன. அனைத்து ஆங்கில‌ ச‌ஞ்சிகைக‌ளிலும் அவ்வார அட்டைப்ப‌ட‌க் க‌ட்டுரை அவ‌ரைப் ப‌ற்றி வெளியிட‌ப்ப‌ட்டு ம‌கிழ‌ப்ப‌ட்ட‌து.

இந்த "பாரதத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்" பட்டியலில் மீரா நாயர், லட்சுமி நிவாஸ் மித்தல் போன்ற பலர் அடங்குவர். ல‌ட்சுமி மித்த‌ல் புதிய‌ புதிய‌ இரும்பு ஆலைக‌ளை த‌ன் வ‌ச‌மாக்கி உல‌க‌ ப‌ண‌க்கார‌ர்க‌ள் வ‌ரிசையில் முன்னிலைக்கு வ‌ரும் நிலையில் 'இரும்பு ம‌னிதர்' என‌ போற்ற‌ப்ப‌ட்டார்.

இவர்கள் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள், ஐயமில்லை. கிட்டத்தட்ட அனைவருமே தனி நபர் சாதனையாளர்களே. ஆனால் உண்மை என்ன? இவர்கள் போன்றோரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? இவர்களால் இந்த நாடும் மக்களும் அடைந்த பெருமை, நன்மை ஏதும் கிடையாது. தானும், தம்மைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவிற்குப் போய் பச்சை அட்டை வாங்கிக் கொண்டு சொகுசாக எப்படி வாழ்வது என்பது பற்றியே அவர்கள் சிந்திக்கின்றனர். ஏதோ குடும்பச் சூழலுக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் அயலகம் போனோமா, சம்பாதித்து திரும்பி வந்து நம் திறமையை நாட்டுக்கு அர்ப்பணித்தோமா என்றின்றி பிழைப்புக்காகவும், சுகபோக வாழ்வுக்காகவும் அயல் நாடுகளில் தமது திறமையை விற்கும் இவர்களிடம் சுயநலம் தவிர தாய் நாட்டுக்கான தியாக எண்ணமா இருக்கிறது?. 'நல்ல விலை கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் என் அறிவை விற்கத் தயார், தாயகம் எக்கேடு கெட்டால் என்ன' என்று நடந்து கொள்ளும் இவர்களுக்கும் இர‌வு வியாபாரிக‌ளுக்கும் என்ன‌ வித்தியாச‌ம் இருக்கிற‌து?

ஆனால், இவர்களால் நமக்கும் நம் நாட்டுக்கும் பெருமை என்பது போன்ற ஒரு தோற்றம் இங்கு உருவாக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. இப்படியே செய்திகள் முகிழ்த்துக் கொண்டிருந்தால் இந்தியா வல்லரசாகி விடும் என்பது போன்ற ஒரு மாயையும் தற்போது நிலவுகிறது.

இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டுவ‌தால் விளைவ‌தென்ன? இங்கு கல்வி பயிலும் மாணாக்க‌ர்க‌ள் பெரும்பாலானோரின் ம‌ன‌தில் "அயல் நாடுகளில் பெரும் நிறுவனங்களிலோ, நாசா போன்றவற்றிலோ இட்டதைச் செய்யும் வேலையும், கை நிறைய‌ டால‌ர்க‌ளில் கூலியும், நியூயார்க் போன்ற நகர்களில் சொகுசுக்கார் பவ‌னியும்" க‌ன‌வுக‌ளாக‌ விதைக்க‌ப்ப‌டுகின்றன. இவர்களால் நாட்டுக்கு அன்னியச்செலாவணி வரவு தவிர வேறெதுவும் பயனில்லை. எவ்வித பெருமையும் இல்லை. ஆனால் இவர்கள் போன்றோரால் தான் நாட்டின் பெருமை செழிக்கிறது என்ற வாதம் மேலோங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் கனவு நிறைவேறி, பச்சை அட்டையுடன் இவர்கள் பரதேசத்தில் சுகவாழ்வு வாழும் போது பார‌த‌ம் மேலும் மேலும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளில் திளைத்து, அர‌சிய‌ல்வாதிக‌ளின் கையில் சிக்கிச் சீர‌ழிந்து கொண்டிருக்கிற‌து. இங்கே நடிகர் திலகமாகவே வாழ்ந்து மறைந்த‌ சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தக் கூட பிரான்சு நாட்டின் விருதுதான் பயன்படுத்தப்படுகிறது. "செவாலியே சிவாஜி கணேசன் சாலை" என்று சாலைக்குப் பெயரிட்டுதான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம், வெட்க‌க்கேடு.

இங்கு வரும் அயல் நாட்டினர் எவரும் க‌ல்ப‌னா சாவ்லாவின் அந்த‌ர‌ ம‌ர‌ண‌ம் ப‌ற்றி துக்கிப்பதில்லை, சுனிதா வில்லிய‌ம்ஸின் விண்வெளிப் ப‌ய‌ண‌ம் ப‌ற்றியோ, பாபி ஜிந்தாலின் வெற்றி குறித்தோ, இரும்பு மனிதர் லட்சுமி மித்தல் பற்றியோ ந‌ம்மிட‌ம் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் கேட்ப‌தெல்லாம், "ஏன் சாலைக‌ள் இவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இருக்கின்ற‌ன‌, ஆட்டோக்கார‌ர்க‌ள் ஏன் இப்ப‌டி ஏமாற்றி காசு பிடுங்குகின்ற‌ன‌ர்" போன்ற‌ கேள்விக‌ளே.

இது போன்ற "சாதனையாளர்"களாலோ அவர்களை நாம் போற்றுவதாலோ நம் நாடு பெருமைக்குரியதாகவோ, வல்லரசாகவோ எக்காலத்திலும் ஆக இயலாது. முதலில் நம்மையும் நம் நாட்டையும் "உண்மையாக" நேசிக்கக் கற்றுக் கொள்வோம். நம் போன்ற சாதாரணக் குடிமக்கள் இனியேனும் மனந்திருந்தி ஊழலையும், சமூக சீர்கேடுகளையும் நம்மால் இயன்ற அளவில் எதிர்த்துப் போரிட்டு சாலைகளில் உள்ள குண்டு குழிகளையேனும் அகற்றப் பாடுபடுவோமாக. அன்னியர் நம்மை அடிமையாக்கியது கடந்த காலம், இன்றோ நம்மவரே அன்னியரின் காலடிகளை வருடி அடிமைகளாக சாசனம் எழுதித் தந்து அவரிடம் செய்யும் அடிமை ஊழியத்தைப் பெருமையாகப் பீற்றும் அவலத்தை நிறுத்த முடியாவிடினும் அதனை வெளிச்சம் போட்டுக் காட்டாதிருப்போமாக. இனி வரும் சந்ததிகளாவது நல்ல பாரதத்தில் வாழட்டும்.

 ====++++====