அசை.
அசை 1 - பிள்ளைத் தமிழ்

அப்போது எங்கள் ஊர் கோவில்பட்டி, நெல்லை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் அது பாகம் பிரிக்கப்பட்டு தூத்துக்குடி பகுதியில் வந்து (பழைய சிதம்பரனார் மாவட்டம்) விட்டது. எங்கள் ஊர்த்தமிழ் கிட்டத்தட்ட நெல்லைத் தமிழ் போல இருந்தும் இல்லாதது. நல்ல திருத்தமும், மரியாதையும் தொனிக்கும் ஒரு வழங்கு தமிழ் அது. சென்னையில் வந்து நான் குப்பை கொட்ட ஆரம்பித்தபோது, "திருநெல்வேலியா நீ" எனக் கேட்டவர்கள் அனேகர். ஆனால் நான், திருநெல்வேலிக்காரனை அவன் பேசும் ஓரிரு வார்த்தைகளில் இருந்தே கண்டுபிடித்து விடுவேன். கிட்டத்தட்ட, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் போன்ற ஊர்க்காரர்களும் இதேமாதிரிதான் அவர்கள் ஊரைச்சார்ந்து ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்ட நெல்லைத் தமிழ் பேசுகிறார்கள் என்று பார்த்திருக்கிறேன்.

நான் பள்ளியில் படிக்கும் போது அதிக அளவில் ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கும் பழக்கம் இல்லை. இன்று நம்மிடம் புழங்கும் இதே வழக்கமான ஆங்கில வார்த்தைகள் அன்று தமிழிலேயே சொல்லப்பட்டன. ரொம்ப ஒன்றும் காலம் ஓடி விடவில்லை, வெறும் இருபது, இருபத்தைந்து ஆண்டுகள்தான். அதற்குள் எவ்வளவு மாறிவிட்டது மொழி. இதைச் 'சீர்கேடு' என்று சொன்னால் மிகையாகாது.

வீட்டிலும் ச‌ரி வெளியிலும் ச‌ரி பெரும்பாலும் ஆங்கில‌ வார்த்தைக‌ளின் உப‌யோக‌ம் வந்திருக்க‌வில்லை. 'ஸ்கூல்' எல்லாம் அப்போது கிடையாது; 'பள்ளிக் கூடம்' தான்.   அதைக்கூட 'ப‌ள்ளிக்கோடம்' என்று சொல்வார்கள்,

அவசரமாகப் பேசும் போது 'பள்ளியூடம்' என்றும் வரும். மேஜை, நாற்காலி, விடுமுறை,

புத்தகம் போன்ற பதங்களே புழக்கத்திலிருந்தன.

நான் மூணாங்கிளாஸ் ப‌டிக்கும் போது முத‌ல் முத‌லில் 'இங்கிலீசு' சொல்லித்த‌ர‌ப்ப‌ட்ட‌து. முத‌லாவ‌து 'மாச‌ப்ப‌ரீச்சை'யில் நான் இங்கிலீசு எழுதிக் கிழித்து நொந்து போனேன். ஒரே ஒரு கேள்வி தான் ஞாப‌க‌ம் இருக்கிற‌து. ஐந்து வ‌ண்ண‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அவ்வளவு தான். இதற்கு நான் பட்ட பாட்டை என்னவென்றே விவரிக்க முடியாது. வியர்த்து விறு விறுத்து விட்டேன், அழுகை வேறு வந்து விட்டது. பதில் நான் எழுதிய லச்சணம் இது தான், தமிழிலேயே 'ரெட், புளு, வயலட்' என்று ஏதோ எழுதி வைத்திருந்தேன். (அப்போதெல்லாம் நாந்தான் முதல் ரேங்காக்கும் ஒண்ணாம், ரெண்டாங்கிளாசில்) 'பரீச்சை பேப்பர்' திருத்தி வந்ததே பார்க்கலாம். நான் ரெண்டோ மூணோ மதிப்பெண் வாங்கி இருந்தேன். வாத்தியார் சொன்னார், 'ஏதோ இந்த அளவுக்காவது கலர் பேரு தெரிஞ்சி வச்சிருக்கானேன்னு, இந்த மார்க்..' என்று. எனக்கும் மேலே மேதாவிகள் எல்லாம் இருந்தனர் அப்போது, ஏதேதோ ஆங்கில எழுத்துக்களை போட்டு என்னென்னவோ எழுதி வைத்திருந்தனர். அதைப் பார்த்து ஆச்சரியமான ஆச்சரியம் எனக்கு, ஒண்ணுமே தெரியாத 'எலிக்குட்டி சீனி' இங்கிலீசுல எழுதிட்டானே, நான் தமிழ்ல தானே எழுதி இருக்கேன்' என்ற தாழ்மை உணர்வில் அவனுடன் நான் ஒரு வாரம் வாக்கில் சரியாகவே பேசவில்லை. அப்போதிருந்தே புல்லரிக்க வைக்கும்படியான தமிழ்ப்பற்று என்று இப்போது மகிழ்ந்து கொள்கிறேன்.

வீட்டில் கூட இன்று நாம் 'ஹால்' என்று சொல்லும் கூடத்தை 'பட்டாலை' என்று தான் சொல்லும் வழக்க்கம். 'வால்கிளாக்' எல்லாம் தெரியாது, கடியாரம் தான். 'டைம்' என்ன? எல்லாம் இல்லை, 'மணி' எத்தனை தான்..

சென்னைக்கு நான் வந்த பின் ஒரு தடவை என் கைக்கடிகாரம் பழுதடைந்து விட்டது. நண்பனிடம் சொன்னேன் "இந்தக் கடியாரத்தை முதல்ல 'செம்ம' பண்ணணும்" என்று. அவனுக்கு ‘கடிகாரம்’ விளங்கியது, ஆனால் 'செம்ம' விளங்கவில்லை. 'என்னது 'செம்ம'யா?' என்று கேட்டான். 'ஆமாம் சரி செய்ய வேண்டும்' என்று சொன்னபின்னரே விளங்கியது 'ஓஹோ ரிப்பேர் பண்ணணுமாக்கும்' என்று புரிந்தான்.  இன்றைய 'ரிப்பேர்' அப்போது 'செம்ம செய்தல் (செம்மை செய்தல்), சீர் செய்தல்' என்று வழங்கப்பட்டது.

அன்று இப்படிப் பேசியவர்கள் இன்று ஆங்கிலத்தில் உதார் காட்டுகின்றனர். நம் வயசுக்காரர்கள் இவர்களாவது போகட்டும் என்று பார்த்தால், கிழடு கட்டைகள் ரொம்பத்தான் மாறிவிட்டார்கள். ஆங்கிலப் பிரயோகத்தில் இன்றைய தகவல் தொழில்நுட்பவாதிகளுடன் போட்டியிடும் அளவுக்கு ஆங்கிலத்தை அள்ளி வீசுகின்றனர்.

அசை 2