அசை.
அசை 10 -  படித்துக் கிழித்த ல‌ச்ச‌ணம்

ஆறாம் வகுப்பு போனதிலிருந்து எனது படிப்பு தலைகீழாக போக ஆரம்பித்து விட்டது. வகுப்பில் எந்த நேரமும் கிண்டல், அரட்டை தான். எந்த‌ ஒரு மாணவனையோ வாத்தியாரையோ விடுவதில்லை, ஏதாவது நக்கல் செய்து கொண்டே இருப்பேன்.

பாடப்புத்தகங்களை விட கதைப்புத்தகங்களையும், வார, மாத இதழ்களையும் தேடித் தேடி படித்தேன்.

மாலை ஆறு மணி சுமாருக்கெல்லாம் பெரிய படிப்பாளி போல புத்தகத்தை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விடுவேன். புத்தகத்தினுள் கண்டிப்பாக கதைப்புத்தகம் இருக்கும். இருட்டும் போது 'படித்து' முடித்து விட்டு கீழே வந்து வீட்டுப்பாடம் செய்து முடித்து விடுவேன். மேலே போய் படித்து விட்டேன், வீட்டுப்பாடமும் செய்தாயிற்று. அதற்கப்புறம் கதைப்புத்தகம் எடுத்தால் பிரச்சினை இருக்காது.

பதினோராம் பன்னிரண்டாம் வகுப்புகளில் புத்தகப் பைத்தியம், திரைப்பைத்தியம் ஆகியவை முற்றி பாடப் புத்தகத்தையே கையில் எடுப்பதில்லை.

காலை 8 மணிக்கு குமாரசாமி வாத்தியாரிடம் கணக்கு தனி வகுப்பு (டியூஷன்). சில நாட்கள் தனி வகுப்பு போவது போல போக்கு காட்டி விட்டு நூலகம் போய் 9 மணி வரை அனைத்து செய்தித் தாள்களையும் மேய்ந்து விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். இது அடிக்கடி நடக்க ஆரம்பித்ததும் வீட்டுக்கு விஷயம் தெரிந்து பிரச்சினை பெரிதாகி விட்டது.

அப்புறம் வேறு வழியின்றி தனி வகுப்புக்கு ஒழுங்காக போனாலும் படிப்பு மட்டும் தலையில் ஏறவே இல்லை.

அசை 11