அசை.
அசை 11 - ஒண்ணுக்கு ஒலிம்பிக் (2)

ஏழாம் வகுப்பு படிக்கும் போது தாமோதர வாத்தியாரிடம் மாலை தனி வகுப்பு (டியூசன்)செல்வேன். அவர் வீடு ஊர்க்கோடியில் புறவழிச்சாலை ஓரத்தில் இனாம் மணியாச்சி என்ற இடத்தில் இருந்தது.

வாத்தியார் வீட்டுக்கு எதிர்ப்புறம் சாலைக்கு அப்பால் லேசாக புதர் மண்டிய காலி இடம் உண்டு. அங்கே தான் எங்கள் 'ஒண்ணுக்கு ஒலிம்பிக்' நடக்கும்.

அங்கே வரிசையாக (புதர்) குத்துச் செடிகள் சீராக ஒரே ஒழுங்கில் இருக்கும். ஆளுக்கு ஒரு செடியைத் தேர்ந்தெடுத்து தண்ணீர் பாய்ச்ச 'புக்' செய்து விடுவோம், 'இது என் செடி' என்று. அன்றிலிருந்து ஒலிம்பிக் 'கவுன்ட் டவுன்' ஆரம்பம் ஆகிவிடும். யாருடைய செடி முதலில் பட்டுப் போகிறதோ அவரே வெற்றியாளர்.

உப்பைத் தின்று தண்ணீர் குடித்து விட்டு வந்து செடியை பூண்டோடு கருக்கும் எமகாதக வேலை எல்லாம் செய்திருக்கிறேன்.

அதே மணியாச்சி பகுதியில் இருந்த ஒரு எம்டன் இரவானால் உப்பைக் கொண்டு வந்து செடியடியில் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டு போகும் திருட்டுத்தனம் செய்தான். இது எங்களுக்கு தெரியவந்து பெரிய சண்டை ஆகி விட்டது. கடைசியில் அடிதடி ஆகி தாமோதர வாத்தியாரிடமே பஞ்சாயத்துக்கு போகும் நிலை ஆகி விட்டது.

முதலில் ஏதோ சாதாரண சண்டை என்று நினைத்த வாத்தியார் விஷயம் தெரிந்ததும் கடுப்பாகி விட்டார். நல்ல வேளையாக அடி கிடி கொடுக்கவில்லை. தனி வகுப்புக்கு வரும் மாணவர்களை பெரும்பாலும் அவர் அடிப்பதில்லை. தீவிர விசாரணைக்கு பிறகு 'கருமம் புடிச்ச பசங்கடா நீங்க' என்று தலையில் அடித்து சிரித்து, விட்டு விட்டார்.

அசை 12