அசை.
அசை 12 - கதர்

அப்போது அனைத்து இலக்குமி ஆலை பள்ளிகளின் பள்ளி சீருடை என்பது வெள்ளை சட்டையும் காக்கி கால்சராயும். ஆங்கிலப் பள்ளிக்கு மட்டும் வேறு. இப்போது சீருடை மாறி விட்டது, நீல நிற கால்சராயும் நீல நிறத்தில் கோடு போட்ட சட்டையும் அணிகிறார்கள்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது உறவுக்கார பையன் ஒருவனைப் பார்த்தும் என் பெரிய மாமாவைப் பார்த்தும் கதர்ச்சட்டை அணிய ஆரம்பித்தேன். சல்லடை மாதிரி பனியன் துணி கூட கதர் ஸ்டோரில் வாங்கி தைத்து போட்டுக் கொள்வேன். கதர் அவ்வளவு பிடிக்கும். ஆனால் துவைத்து, கஞ்சி போட்டு, இஸ்திரி செய்து போடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

எஜமான் படத்தில் ரஜினிகாந்த் கதர் பனியன், சட்டை அணிந்து வருவார். நிறைய பேருக்கு அப்போதுதான் கதர் பனியன் இருப்பதே தெரிய வந்தது. 'எஜமான் ஸ்டைல்லே கதர் பனியன் போட்டிருக்கே, ரஜினி ரசிகனா நீ?' என்று சிறியவர் பெரியவர் வித்தியாசம் இல்லாமல் கேட்க ஆரம்பித்ததில் கதர் பனியன் போடுவதையே நிறுத்தி விட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு வரை கதர் சட்டை மட்டும் தொடர்ந்தது.

சென்னைக்கு வந்த பின் கதர் சட்டை போடும் பழக்கம் நின்று விட்டது. இப்போது மூன்று வருடங்களாக அண்ணாசாலை கதர் விற்பனையகத்தில் துணி எடுத்து ஊருக்கு போகும் போது அங்கே தைத்து எடுத்து வந்து விடுகிறேன். ஊரில்தான் கதர் ஒழுங்காக தைக்கிறார்கள்.

அண்ணா சாலை கதர் நிலையத்தில் வித விதமான வண்ணங்களிலும், பட்டு வகைகளிலும் அருமையான கதர் சட்டை துணிகளும், பைஜாமா, சுடிதார் ஆகியவை கூட ஆயத்தமாகவும் (ரெடிமேட்) கிடைக்கின்றன.

இப்போது நான் கதர், டெனிம் என வித விதமாய் உடை அணிந்தாலும் கதரின் மிடுக்கு வேறெதிலும் இல்லை.

அசை 13