அசை.
அசை 13 - மிதிவண்டி

ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் எனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியாது. மிதிவண்டி வாங்கித் தராவிட்டாலும் பரவாயில்லை, பலமுறை வீட்டில் மன்றாடிப் பார்த்தும் மிதிவண்டி பழகக்கூட ஒப்புதல் கிடைக்கவில்லை. யாரோ ஒரு சோதிடர் அப்போது எனக்கு ஒரு 'கண்டம்' இருப்பதாக சொல்லியதன் பலன் அது.

சக மாணவர்கள் சிலர் உயரம் பற்றாமல் எக்கி எக்கி மிதித்துக் கொண்டாவது மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தனர். நடந்து வரும் என்னைப் பார்த்து, 'எலேய், என்ன இன்னும் நடராஜா தானாலே?' என்று நகையாடி என் வயிற்றெரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தனர். ஏழாம் வகுப்பு அரையாண்டு விடுமுறையில் ஒரு வழியாக மிதிவண்டி பழக ஒப்புதல் கிடைத்தது.

பக்கத்து வீட்டுக்காரன் துணையுடன் முதல் நாள் என் அப்பாவின் மிதிவண்டியை பலத்த பாதுகாப்புடன் (நான்கைந்து பேர் கூட வந்தனர்) உருட்டிக் கொண்டு பக்கத்தில் இருந்த ஆயிர வைசிய மேல் நிலைப்பள்ளி (செட்டியார் பள்ளி, செட்டி மடம் என்று சொல்வோம்) மைதானத்திற்கு சென்றேன். முதல் நாள் வெற்றிகரமாக கீழே விழாமலேயே சமாளித்து ஓட்டி விட்டேன்.

இரண்டாம் நாளிலிருந்து வாடகை வண்டிதான். கீழே விழுந்து ஏகப்பட்ட 'விழுப்புண்கள்' ஏற்பட்டன. நான் மிதிவண்டி பழகுவதற்குள் 'டெராமைசின் களிம்பு' மட்டும் அரைக்கிலோ உபயோகித்திருப்பேன். நன்றாக பழகி விட்டாலும் வாடகைக்கு வண்டி எடுத்து 'பழகுவது' ஒரு பொழுதுபோக்காகவே ஆகி விட்டது எனக்கு.

நாளடைவில் பள்ளிக்கு என் அப்பாவின் மிதிவண்டியில் போக ஆரம்பித்தேன். கடும் பாரமாக இருக்கும் அந்த ஹெர்குலிஸ் வண்டி, ரொம்ப ராசியானது, அனாவசிய செலவே வைக்காது, பூப்போல செல்லும். என்னதான் எண்ணெய் போட்டு தேய்த்து மெருகேற்ற முயன்றாலும் துருப்பிடித்த பழுப்பு மட்டும் மாறவே இல்லை.

பத்தாம் வகுப்பு பாதியில் புதிய மிதிவண்டி கிட்டியது. பின் அடுத்த ஆண்டே மொபெட் கிடைத்து விட்டது. அதற்கு மறு ஆண்டு பராமரிப்பின்றி கிடந்த அப்பாவின் பழைய மிதிவண்டி நூற்றி எழுபது ரூபாய்க்கு பரிதாபமாக விற்கப்பட்டது.

இன்று மோட்டார் சைக்கிளில் விரையும் போது முகத்தில் காற்று அறைந்தாலும், மிதிவண்டி இறக்கத்தில் செல்லும் போது மிதிப்பதை நிறுத்தி விட்டால் கிடைக்கும் பால்ரஸ் பேரிங் சத்தமும், முகத்தில் தடவிச் சென்ற தென்றலும் தரும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

அசை 14