அசை.
அசை 14 - நீச்சல்

இன்றும் எனக்குள்ள ஒரு பெரும் குறை நீச்சல் தெரியாது என்பது தான்.

பிறந்து, வளர்ந்தது நடுத்தர நகரமாகிய கோவில்பட்டியில், வீட்டிலேயே குளியலறை. எனவே நீச்சல் பழக வாய்ப்பு அதிகம் இல்லாமலேயே போய் விட்டது.

சோதிடர் வேறு 'கண்டம், தீவு, நாடு' என்று பயமுறுத்தி வைத்திருந்தார். எப்போதாவது கிராமத்திற்கு போகும்போது கூட அழைத்துச் செல்பவர்கள் 'கிணறு, கம்மாய் பக்கம் போயிடாம பார்த்துக்கோங்க' என்று அறிவுறுத்தப்பட்டனர்.

எட்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் கிராமத்திற்கு போன போது பையன்களுடன் சேர்ந்து கிணற்றுக்கு போய் நீச்சல் பழக முயற்சி செய்தேன்.

முதல் நாள் விளையாட்டாய் ஒரு பெரிய கிணற்றுக்கு போனோம். கிணற்றைப் பார்த்ததுமே எனக்கு பயம் வந்து விட்டது. தயங்கி நின்று கொண்டிருந்த என்னை மே.......லிருந்து உள்ளே தள்ளி விட்டு விட்டனர். எக்கச்சக்கமாய் தண்ணீர் குடித்து திணறி நான் மூழ்க ஆரம்பித்ததும் பையன்கள் அரண்டு விட்டனர். அது பலபேரை காவு வாங்கிய கிணறாம். எப்படியோ நான்கு பேர் சேர்ந்து என்னை கரையேற்றினர்.

பல நாட்கள் காலி பிளாஸ்டிக் கேனை துண்டால் இடுப்பில் கட்டி கிணற்றில் இறக்கி என்னென்னவோ முயற்சி செய்தும் எனக்கு நீச்சல் வரவே இல்லை.

பின்னர் பதினோராம் வகுப்பு விடுமுறையில் நூலகம் போகிறேன் என்று வீட்டில் புளுகி விட்டு திருட்டுத்தனமாக ஆலம்பட்டி கண்மாய்க்கு பையன்களுடன் போய் விடுவேன். நீச்ச‌ல் ப‌ழ‌குகிறேன் என்று ம‌ணிக்க‌ண‌க்கில் க‌ரையோரக் குளிய‌ல் போட்டு விட்டு வ‌ந்து கொண்டிருந்தேன். போடுவது எருமைக் குளிய‌ல், சுகமாக கரையோர நீரினுள் மணிக்கணக்கில் விளையாட்டு, இதில் நீச்ச‌ல் எங்கே வ‌ரும்?

எங்க‌ள் தெருவிலிருந்த‌ பைய‌ன் ஒருவ‌ன் அந்த‌ வ‌ருட‌ம் கிண‌ற்றில் விழுந்து இற‌ந்து போய் விட்டான். அப்போதுதான் என் அம்மாவுக்கு சந்தேக‌ம் வ‌ந்த‌து. காலையில் போகும் போது த‌லை நிறைய‌ எண்ணெய் இருந்த‌தே, ம‌த்தியான‌ம் வ‌ரும்போது சுத்த‌மாக‌ த‌லையில் எண்ணையே இல்லையே.... எங்கேயோ போய் கிண‌ற்றிலோ கண்மாயிலோ குளித்து விட்டு வ‌ருகிறேன் என்று தெரிந்து விட்டது, ஒரே புல‌ம்ப‌ல். அத‌ற்கு மேல் க‌ண்மாய்ப்ப‌க்க‌ம் போக‌ முடியுமா என்ன‌?

அப்ப‌டியும் கூட‌ ஓரிரு முறை சிறிய‌ பாட்டிலில் எண்ணெய் கொண்டு போய், திரும்ப‌ வ‌ரும்போது த‌லையில் எண்ணை தேய்த்துக் கொண்டு வ‌ருவ‌து போன்ற‌ திருட்டுத்த‌ன‌ங்க‌ள் எல்லாம் செய்தேன்.

க‌டைசி வ‌ரை என‌க்கு நீச்ச‌ல் ம‌ட்டும் வ‌ர‌வே இல்லை.

அசை 15