அசை.

அசை 15 - ஐய்ய்ய்...ஏரோப்பிளேன்.......

முதன் முதலில் இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் கோடை விடுமுறைக்கு சென்னை வந்திருந்தேன். அயனாவரத்தில் பச்சைக்கல் வீராசாமி தெருவிலிருந்த என் மாமா வீட்டில் சுமார் இருபது நாட்கள் வாசம்.

சென்னை வந்து சேர்ந்த முதல் நாளிலேயே பெரிய அவமானம் ஒன்றை சந்திக்க நேர்ந்தது. வீட்டினுள் இருந்த எனக்கு திடீரென வெளியே ஆகாய விமானம் தாழ்வாக செல்லும் போது ஏற்பட்ட பலத்த ஒலி கேட்டது. 'ஐய்ய்ய், ஏரோப்பிளேன் போகுது' என்று கூவிக்கொண்டே வீட்டுக்கு வெளியே தெருவுக்கு ஓடிச் சென்று ஆகாயத்தை அண்ணாந்து விமானத்தை வேடிக்கை பார்த்தேன். 'ஆஹா, அவனா நீ.....' என்பது போன்ற ஒரு பார்வை பார்த்தனர் தெருப்பசங்கள். உடனேயே 'பட்டிக்காடேய்ய்ய்ய்ய்ய்ய்' போன்ற இழுவையுடன் கூடிய கேலி, கிண்டலுக்கு ஆளானேன். அப்புறம் தான் சென்னையில் விமானம் பறப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு தெரிய வந்தது.

எங்கள் ஊரில் இலக்குமி ஆலைக்கு சொந்தமான ஒரு விமான தளம் இருக்கிறது. வெகு அபூர்வமாக வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை முதலாளி கோவில்பட்டி வந்து விட்டு போவார். அப்போது 'இப்படித்தான்' விமானத்தை பார்த்து பழக்கம்.

அந்த தெரு பையன்கள் என்னை நக்கலடித்ததைப் பார்த்து முதலில் ரொம்ப கேவலமாக இருந்தது. அழுது பிடித்து ஊரைப்பார்த்து போய்விடலாமா என்று பார்த்தால், அதற்கும் வழியில்லை. ஊருக்கு துணையாக வர யாருக்கும் விடுமுறை இல்லை போன்ற சாக்குகள் சொல்லி தட்டிக் கழித்து விட்டனர்.

'ஐய்ய்ய்ய்... ஏரோப்பிளேன்' என்று என்னைப் பார்த்தாலே குரல் கொடுத்து ரொம்ப நக்கலடித்த இரண்டு பேருக்கு முரட்டுத்தனமாக தர்ம அடி கொடுத்ததில் தெருவே அரண்டு விட்டது. அப்புறம் வேறு யாரும் என்னிடம் வாலாட்டவில்லை. பட்டிக்காட்டான் என்று என்னை உரக்க அழைத்துக் கொண்டிருந்த எல்லோரும் அதற்குப் பின்னர் 'காட்டுமிராண்டி' என்று என்னை அவர்களுக்குள் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த விஷயம் ஊருக்கு போகும்போது தான் தெரிந்தது.

எங்கள் ஊரில் எங்கள் தெருவில் அப்போது ஒரு வீட்டில் கூட‌ தொலைக்காட்சி வாங்கி இருக்கவில்லை. இங்கே சென்னையில் பார்த்தால், கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி இருந்தது. வண்ணத் தொலைக்காட்சி கூட பல வீடுகளில் இருந்தது.

அப்போது 'புனியாத்' எனும் இந்தி தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. புனியாத் நேரமான ஒன்பது மணிக்கு தெருக்களில் ஜன நடமாட்டமே இருக்காது. இந்தி தெரியாத ஊரில் புனியாத் அப்படி மக்களைக் கட்டிப் போட்டிருந்தது.

தூர்தர்ஷனில் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கிலத்திலேயே பிளேடு போட்டுக் கொண்டிருந்தனர். நமது மக்களும் புரிகிறதோ இல்லையோ கடனே என்று அவற்றையும் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்த நேரமே ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்கள் பிரபலமாக ஒளிபரப்பாயின.

இன்றைய நவீன நெடுந்தொடர்களுடன் ஒப்பிடும் அளவு தொழில் நுட்பம், காட்சி அமைப்பு, நடிப்பு, அரங்க அமைப்பு, ஒப்பனை என எதுவுமே அப்போது இல்லாவிடிலும் அனைத்து நிகழ்ச்சிகளும் குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருந்தன. அடிக்கடி தண்ணீர் குடிக்க எழுந்து போக அவசியமில்லாத நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகின. 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' தான் பெரிய எரிச்சலைக் கொடுத்த ஒரு பிரச்சனை.

தண்ணீர் பாக்கெட்டுகளிலும் பாட்டில்களிலும் பிரபலமாகாத அந்த கால கட்டத்தில் சென்னையில் கூட அனைத்து கடைகளிலும் தண்ணீர் கேட்டால் இலவசமாக கிடைத்தது. சில கடைகளில், மருந்து நெடிய‌டிக்கும் மாநகராட்சி குடிநீர் எவர்சில்வர் டம்ளர்களில் நிரப்பப்பட்டு குளிர்பதன‌ பெட்டியில் வைக்கப்பட்டு ஒரு டம்ளர் இருபது பைசாவிற்கு விற்கப்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த அப்போது தெருக்கள் வெகு சுத்தமாக இருந்தன.

விடுமுறை முடிந்து ஊருக்கு போய் பள்ளி தொடங்கிய பின் சக மாணவர்களிடம் எனது 'மெட்ராஸ்' புராணத்தை ஏகப்பட்ட புளுகுகளுடன் பெருமையடித்துக் கொண்டேன். அந்த 'ஐய்ய்ய்ய் ஏரோப்பிளேன்....' விஷயத்தை மட்டும் சொல்லவே இல்லை.

அசை 16