அசை.
அசை 16 - கணிப்பொறி

நான் பன்னிர‌ண்டாம் வ‌குப்பு படித்து முடிக்கும் த‌றுவாயில் எங்க‌ள் ப‌ள்ளியில் க‌ணிப்பொறி வாங்க‌ப்ப‌ட்ட‌து. பெரிய‌ ப‌ர‌ப‌ர‌ப்பான‌ விஷ‌ய‌ம் அது. மேதகு கணினி அப்போது சகல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்தது. அதை சாக்காக வைத்து தலைமை தர்மராஜ் வாத்தியார் தமது அறைக்கு குளிர்வசதி செய்து கொள்ளப் போவதாகவும் கேள்விப்பட்டேன்.

ம‌த்தியான‌ சாப்பாட்டுக்கு பின் த‌லைமை ஆசிரிய‌ர் அறைக்குள் இருக்கும் க‌ணினியை கண்ணாடி வழியாக பார்த்து விட்டு வந்த‌ன‌ர் சில‌ர். அதற்கு முன் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் கணிப்பொறியைப் பார்த்திருந்தோம்.

ஒரு நாள் அவ‌ர‌து அறைக்கு செல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏற்ப‌ட்ட‌து. த‌லைமையாசிரிய‌ரிட‌ம் ஒரு குறிப்பேட்டை கொடுக்கும்ப‌டி யாரோ என்னைப் ப‌ணித்திருந்த‌ன‌ர்.

நேராக‌ த‌லைமையாசிரிய‌ர் அறைக்குள் நுழைய‌ முய‌ன்ற‌ என்னை அங்கிருந்த‌ அலுவ‌ல‌க‌ எழுத்த‌ர் ஒருவ‌ர் ஓடோடி வந்து த‌டுத்தார். 'செருப்பை க‌ழ‌ட்டிட்டு உள்ளே போ' என்று க‌ண்டிப்பாக‌ சொல்லி விட்டார். ம‌ரியாதை நிமித்த‌மாக செருப்பை கழட்ட வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டு உள்ளே போய் விட்டு வ‌ந்தேன். தலைமை ஆசிரியருக்கு முன்னால் முழுதும் முக்காடு போட்டுக்கொண்டு ஒரு சிறு பாக‌ம் கூட‌ தெரியாம‌ல் ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ணினி இருந்த‌து. அந்த‌ அளவு பாதுகாப்பு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. அப்ப‌டியே கொண்டு போய் குற்றால‌ அருவியில் வைத்தால் ஒரு பொட்டு த‌ண்ணீர் கூட‌ உள்ளே போகாத‌வாறு இருந்த‌து.

வெளியில் வந்த பின்னர் தான் நண்பன் ஒருவன் சொன்னான், 'உள்ள போக முன்னாடி செருப்பை கழட்டினியா? இல்லேன்னா கம்ப்யூட்டருக்கு வைரஸ் வந்துரும்' என்றான். 'ஓஹோ இதுக்குத்தானா' என்று நினைத்துக் கொண்டேன்.

ரொம்ப நாள் வரை கணிப்பொறி வைரஸ் என்றால் அமீபா போன்ற கிருமி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தான் விஷயம் தெரிந்தது.


அசை 17