அசை.
அசை 2 - விழாக்கள்

ஆரம்பப்பள்ளியைப் பொறுத்தவரை வெகு சுருக்கமாகவே விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. நான் ரொம்ப ஒல்லியாக, நோஞ்சானாக இருந்ததால் அதைக்காட்டியே என்னை விளையாட்டு எதிலும் சேர்க்க மாட்டார்கள். ஒல்லியாக இருந்தால் பலவீனன் என்பது பொதுக்கருத்தாக இருந்தது.

மேல் நிலைப் பள்ளியின் விளையாட்டு விழாவானது ஆண்டு விழாவுக்கு முன் தினம் நடைபெறும். சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் படிக்கும் பள்ளி அது. போட்டிகளுடன் பழைய மாணவர்களுக்கு இரண்டாயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடக்கும், விளையாட்டு விழாவின் கடைசி பந்தயமும் விறு விறுப்பான பந்தயமும் அது தான். போட்டிகள் முடிவடைந்த கையோடு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதில் வேர்க்க விறு விறுக்க ஓடி வென்ற பழைய மாணவருக்கு வெகு அல்பமாக பிளாஸ்டிக் வாளி அல்லது பேசின் ஒன்று தருவார்கள் பார்க்க வேண்டுமே...

ஆண்டு விழாவானது மொத்தமாக நான்கு பள்ளிகளுக்கும் சேர்த்து வெகு விமரிசையாக நடைபெறும். மூன்று துவக்கப் பள்ளிகள், ஒரு மேனிலைப் பள்ளி பங்கேற்கும் பெரிய விழா அது. ஒப்பனை செய்யுமிடத்துக்கு நான் போனால் எனக்கும் ரோஸ் பவுடர் போட்டு விடுவார்கள். அதில் எனக்கு பெருமை ஏகப்பட்ட பெருமை.

மாலை மூன்று, நான்கு மணிக்கு மைக் டெஸ்டிங்கை தொடர்ந்து தரமான திரைப்படப் பாடல்கள் ஒலிக்கத் துவங்கி விடும். அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து ஆர்மோனிய பெட்டியில் சலங்கை ஒலி, சங்கராபரணம் போன்ற திரையிசைப் பாடல்கள் வாசிக்கப்படும். பின்னர் பள்ளித்தாளாளர் வந்த பின், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் போன்ற யாராவது ஒரு தலைமை விருந்தினர் வந்து குறைந்தது அரை அல்லது ஒரு மணி நேரம் 'அறுத்த' பின்னரே பரிசளிப்பு தொடங்கும். முந்தைய ஆண்டில் முதல் தர மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

ஆறரை, ஏழு மணியளவில் சற்று இருட்டிய பின் அதீத ஒலி, ஒளி அமைப்புகளுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கும்.  பள்ளியின் ஓவிய ஆசிரியர் அரங்க அமைப்பு, வண்ண மயமான ஏற்பாடு ஆகியவைகளை திறம்பட செய்திருப்பார். எனக்குத் தெரிந்து அவர் ஒரு வகுப்பாவது உருப்படியாக எடுத்ததில்லை. ஆனால் அரங்க அலங்காரம் வெகு சிறப்பாக இருக்கும். நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டுமே........, பரத நாட்டியத்துடன் தொடங்கும் நிகழ்ச்சிகள் வித விதமாக நீளும்.  கண்ட திரைப் பாடல்களைப் போட்டு தங்கு தங்கென்று கூத்தாடாமல் நளினமான பாடல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நாகரீகமான வகையில் நடன நிகழ்ச்சிகள் இருக்கும். இதிலும் நான் மேடைப் பக்கமே போனதில்லை.

பள்ளிக் குழுமத்தில் ஒரு ஆங்கில பள்ளியும் இருப்பதால், புரியாத சில‌ ஆங்கிலப் பாடல்களுக்கு நடனம், ஓரிரண்டு ஆங்கில நாடகங்களும் வேறு போட்டு ரம்பம் போடுவார்கள்.

கடைசியாக ஒரு மகா நாடகம் நடக்கும் பாருங்கள், அனேகமாக அது துவங்கும் போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விடும். முழு நீள நாடகமாக ஒரு மணி நேரம் வரை போகும். மொத்தத்தில் விழா முடிந்து வீடு திரும்புவதற்குள் ஒன்றரை மணி, சில ஆண்டுகளில் மூன்று மணி கூட ஆகி விடும்.

சில ஆண்டுகள் முன்பு ஆண்டு விழா பார்க்க ஆவலுடன் போன எனக்கு பெருத்த ஏமாற்றமே. அரங்க நிர்மாணம், அலங்காரம் எதுவும் சகிக்கவில்லை. மூன்றாந்தர ரசனையுடன் செய்திருந்தார்கள். நிகழ்ச்சிகளைக் கண்கொண்டு காண இயலவில்லை. மகா மட்டமான அளவிலேயே எல்லாம் இருந்தன. கடைசியில் ஒன்பது மணிக்கெல்லாம் விழா முடிந்தது.

அசை 3