அசை.
அசை 3 - திரை வெறி

பத்தாம் வகுப்பு படிக்கும்போது கொடுமையான 'திரைவெறி' என்னைப் பீடித்தது. ஊரில் திரையிடப்படும் ஒரு படம் விடுவதில்லை. ஒரே நாளில் இரண்டு படம், மூன்று படம் வரை பார்க்கிற அளவுக்கு திரைப்படப் பைத்தியம் ஆகி விட்டேன்.

அதுவும் சும்மா இல்லை, வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக படம் பார்ப்பது தான் இதில் சிறப்பு. ஒரு தடவை கூட மாட்டியதில்லை.

அந்தப்படம் இந்தப்படம் என்று வகை தொகை இல்லை. புரூஸ்லீ, ஜாக்கி சான், ஜேம்ஸ்பாண்ட், சிரஞ்சீவி, எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், அர்ஜுன் என யார் நடித்திருந்தாலும் பிரச்சினை இல்லை. போய் உட்கார்ந்து முழுப்படமும் பார்த்து விடுவது என்ற வைராக்கியத்துடன் இருந்தேன். ராமசாமி திரையரங்கம் என்ற ஒரு பாழடைந்த திரையரங்கம் தான் என் பிடித்தமான அரங்கம். எங்கெங்கோ இருந்து தேடித்தேடி எம்.ஜி.ஆர், சிவாஜி, விட்டலாச்சார்யா படங்கள் போடுவார்கள்.

'சொட்டை' என்று அன்புடன் எல்லோராலும் விளிக்கப்பட்ட கிருஷ்ணராமானுஜம் என்பவர் தலைமையாசிரியராக இருந்த நேரம் அது. காரணமின்றி யாராவது வகுப்பை விட்டு வெளியில் தென்பட்டால் கதை கந்தலாகி விடும். அப்படிப்பட்டவரிடம் மாட்டாமல் இரண்டாவது பீரியட் 10.30க்கு முடிந்து இடைவேளை மணி அடிக்கும் போது ஓடி விடுவேன். மிதிவண்டியில் பறந்து சென்று ஏதாவது ஒரு திரையரங்கில் அமர்ந்து விடுவேன். படம் முடிந்து ஒன்றரை அல்லது இரண்டு மணிக்குள் வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு நல்ல பிள்ளையாய் மதிய வகுப்புக்கு ஆஜர் ஆகிவிடுவேன்.

மதிய ஆட்டம் படம் போனால், அரை நாள் விடுமுறை அல்லது ஆப்சென்ட். விடுமுறைக் கடிதத்தில் பெற்றோர் கையொப்பம் தேவை. கையொப்பம் போடும் அளவுக்கெல்லாம் பெற்றோருக்கு சிரமம் வைப்பதில்லை, நானே போட்டுக் கொடுத்து விடுவேன்.

திரையரங்க கட்டணம் ஒன்றரை அல்லது இரண்டு ரூபாய் தான். மிதிவண்டி நிறுத்த இருபத்தைந்து அல்லது ஐம்பது பைசா. இதை சமாளிக்க எனது செலவுக்குத் தரப்படும் கைக்காசு போதுமானதாக இல்லாவிடில் வீட்டிலேயே திருடி சமாளித்துக் கொள்வேன்.

எனது நல்ல நேரமோ என்னவோ, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறியதில் நானே அதிர்ந்து போய் விட்டேன். ஐநூறுக்கு 425 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். சமூக அறிவியலில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண், அறிவியலில் பள்ளியில் முதல் மதிப்பெண் என்று வாங்கி இருந்தேன்.

மொட்டை மாடியில் நார்க்கட்டில் போட்டுத் தூங்குவது என் பழக்கம். இரவு இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்க்க இந்த பழக்கம் உதவியது. ஒன்பது, ஒன்பதரைக்கெல்லாம் தூங்க செல்வது போல போக்குக் காட்டி விட்டு ஊரடங்கிய பத்தேகால், பத்தரை வாக்கில் மெதுவாக இறங்கி திரையரங்கம் நோக்கி என் பயணம் துவங்கி விடும். இதற்கு சில சமயம் பக்கத்து வீட்டு பையனும் துணை வருவான். இரண்டு பேரும் தத்தம் வீட்டு மாடிகளில் படுத்திருப்போம். முதலில் என் பக்கத்தில் ஒரு கல் வந்து விழுந்து புறப்பட நேரமாகிவிட்டது என அறிவிக்கும். அப்புறம் கிளம்பி போக வேண்டியது தான்.

போகிற வழியில் பின் வீட்டு நாய் குரைக்காமல் இருக்க அதற்கு லஞ்சம் கொடுக்க‌ தின்பண்டம் கூட எடுத்துக்கொண்டு போவதுண்டு.  ஒரே ஒரு பிரச்சினை, அவனுக்கும் சேர்த்து நான் தான் வீட்டில் திருட வேண்டும், இது சரி வராததால் அவனை பெரும்பாலும் கழற்றி விட்டு விடுவேன்.

ஒரு நாள் அவன் மட்டும் தனியே இரண்டாவது ஆட்டம் திரைப்படம் பார்க்க போயிருக்கும் போது மழை பிடித்து விட்டது. சரியான மழை. இவன் தூங்குவது போல போக்குக் காட்ட, பாயை விரித்து அதில் செங்கல், கட்டை ஆகியவற்றை வைத்து ஒரு உருவம் அசப்பில் தூங்குவது மாதிரியே செட்டப் செய்து விட்டு திரைப்படம் பார்க்க போய் விட்டான். அவனது வீட்டில் மழையைப் பார்த்து விட்டு இவனைத் தேடி மாடிக்கு வந்து பார்த்ததில் இவனது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விட்டது. வீட்டுக்கு திரும்பியவுடனே அர்த்தராத்திரியில் வசமான 'மிட்நைட் மசாலா' அவனுக்கு. இது நடந்ததில் இருந்து, இரவில் வெயிலே காய்ந்தால் கூட திரையரங்கத்திற்கு போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டேன்.

பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது திரைப்பைத்தியம் முற்றி விட்டது. அப்போது மொபெட் இருந்ததால், வீட்டில் நேரடியாக திருடுவதில்லை. பெட்ரோல் காசில் கள்ளக்கணக்கு காட்டி சமாளித்து விடுவேன்.

அசை 4