அசை.
அசை 4 - தொல்லைக்காட்சி

1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் நாள். ஊரே துக்க மயமாக இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் 'நாங்க டீவி பாக்க போறோம்' என்று கிளம்பினர். நானும் வீட்டில் அனுமதி வாங்கி கூடவே சென்றேன்.

அது நாள் வரை தொலைக்காட்சியை நான் நேரில் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை, எனக்கு அப்போது 8 வயது.

வீரம்மாள் டீச்சர் என்ற ஆசிரியை வீட்டில் அப்போதே வண்ணத் தொலைக்காட்சி இருந்தது. அங்குதான் அழைத்துப் போனார்கள். காலை ஒன்பது மணியளவில் தொலைக்காட்சி பெட்டி முன்பு போய் உட்கார வைக்கப்பட்டேன். அப்படியே அசந்து விட்டேன். 'ஓஹோ, இப்படி ஒரு விஷயம் இருக்குதா, பெரிய அதிசயமா இருக்கே' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். வானொலி பெட்டியின் தத்துவம் பற்றியே எதுவும் தெரியாமல் ஏற்கனவே குழம்பிக் கொண்டிருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட நூறு ஆக்கிரமிப்பாளர்களால் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. பலகணி வழியாகவும் முகங்கள் முண்டியடித்தன.  'டொய்ங், டொய்ங்' என்று ஒரு குழு வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தது.

பாவம், குடியரசுத்தலைவர் ஜெயில் சிங்கின் முகம் திரையில் தெரியும் போதெல்லாம், அவருக்கு தாறுமாறாக வசவுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 'இவந்தானே ஜெயிலன், இவந்தான் ஆளு வச்சி சுட்டுட்டான், இவனெல்லாம் நல்லா இருப்பானா, இவனையும் சேர்த்து வச்சி எரிக்கணும், நாசமாப் போறவன்' என்று பலவிதமான உளறல்கள் கேட்டவண்ணம் இருந்தன.

தொலைக்காட்சிக்கு வெகு முன்புறம் இருந்ததால் ஜனத்திரளில் தப்பி நீந்தி வெளியே வர இயலாமல் அங்கேயே கிடந்தேன். பெரிய அவஸ்தையை அனுபவித்தேன்.

அங்கே என்ன திரைப்படமா காட்டினார்கள்? இந்திரா காந்தியின் பழைய பதிவுகள் சில நொடிகள், புகைப்படம், ஜெயில்சிங், ராணுவ வண்டியில் மலர் போர்த்திய ஊர்வலம், வாத்தியக்குழு என்று திரும்பத் திரும்ப இவையே வந்து கொண்டிருந்தன. எனக்கு அப்போது என்ன தெரியும்? ஒரு கட்டத்தில் அழுகையே வந்து விட்டது. மதியம் மூன்று மணி இருக்கும் என்று நினைக்கிறேன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டுக்கு குறையத் தொடங்கியது. தப்பித்தேன் பிழைத்தேன் என்று குதிகால் பிடரியில் பட வீட்டுக்கு ஓடி வந்தேன்.

இந்த ஆரம்பத்தாலோ என்னவோ தெரியவில்லை, தொலைக்காட்சி என்றால் அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை.

அசை 5