அசை.
அசை 5 - புத்தகங்கள்

சிறிய வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிப்பதில் அதிக‌ ஆர்வம் எனக்கு.

பாலமித்ரா, ரத்னபாலா, கல்கி, கலைமகள், அமுதசுரபி, ஸப்தகிரி, சோவியத் லிட்டரேச்சர் போன்ற புத்தகங்கள் எங்கள் வீட்டில் வாடிக்கையாக வாங்கப்பட்டன.

எங்கள் தெருவிலேயே எங்கள் வீட்டில் மட்டுமே காசு கொடுத்து புத்தகங்கள் வாங்கப்பட்டன. மற்ற வீடுகளில் பெரும்பாலும் இரவல் வாங்கி படிப்பார்கள் அல்லது புத்தகம் படிக்கும் வழக்கமே கிடையாது.

அந்தந்த வார, மாத புத்தகங்கள் எல்லாம் படித்து முடித்தபின் படிப்பதற்கு எதுவும் இருக்காது. காற்றோட்டமில்லாத உள் அறைக்கு சென்று அங்கு இருக்கும் பழைய புத்தகங்களை வியர்க்க விறுவிறுக்க படித்துக் கொண்டிருந்து வீட்டில் வசவு வாங்குவதுண்டு.

ஏழாவது படிக்கும் வரை புத்தகங்கள் வாங்கப்பட்டன. பின்னர் எனது படிப்பு கருதி கல்கி தவிர மற்ற அனைத்தும் நிறுத்தப்பட்டன. சில ஆண்டுகளில் கல்கி கூட நிறுத்தப்பட்டு விட்ட்து. இருந்தாலும் நான் க‌டைசி வ‌ரை பாட‌ப்புத்த‌க‌ங்க‌ளை ம‌ட்டும் ப‌டிக்க‌வே கூடாது என்ற‌ வைராக்கிய‌த்தில் இருந்து விட்டேன்.

ப‌ட‌க்க‌தைப் புத்த‌க‌ங்க‌ள் (காமிக்ஸ்) எங்க‌ள் வீட்டில் வாங்கும் வ‌ழ‌க்க‌மில்லை என்றாலும், ப‌க்க‌த்திலிருந்த‌ ப‌ழைய‌ புத்த‌க‌ க‌டையில் ப‌த்து பைசாவுக்கு வாட‌கைக்கு எடுத்தாவ‌து ப‌டித்து விடுவேன். (ஆறு மாதங்களுக்கு முன் ல‌ய‌ன் காமிக்ஸின் டெக்ஸ் வில்லர் கதை ஒன்றை வாங்கிப் ப‌டித்தேன்).

மிகத்தரமான இதழ்களே வெளிவந்த நேரம் அது. கிட்டத்தட்ட அனைத்துமே குடும்ப பத்திரிகைகளாகவே இருந்தன. அதிலும் குமுதம், விகடன், ராணி போன்றவை எங்கள் வீட்டில் தவிர்க்கப்பட்டன.

இப்போது வரும் இதழ்களின் லட்சணம் வெகு கேவலம். திரைத்துறையை மையமாக்கியே பல இதழ்கள் சதை வியாபாரம் போல பிழைப்பை நடத்துகின்றன.

கல்கியை எடுத்துக் கொண்டால் முன்னெல்லாம் திரை விமர்சனம் என்ற அரை அல்லது ஒரு பக்க செய்தியைத் தவிர வேறெந்த திரைத்துறை செய்தியும் அனேகமாக இருக்காது. ஒரு வருடம் முன்பு கல்கி வாங்கிப் படித்த போது அதன் தற்போதைய போக்கு குமுதம், விகடன் ஆகியவற்றை ஒத்திருந்தது. கல்கியும் இப்போது 'வெகுஜனரஞ்சக' பத்திரிகை ஆகிவிட்டது தெரிந்தது.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது பொது நூலக உறுப்பினராக சேர்ந்த பின் புத்தக வெறியனாகவே ஆகி விட்டேன்.

திரைப்படம் பார்க்கும் பழக்கம் வந்தபின்னர் புத்தகப் பழக்கம் குறைந்தாலும் விடாது இன்றும் தொடர்கிறது.

அசை 6