அசை.
அசை 6 - வழிப்போக்கு வாலாட்டல்கள்

வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமிருந்த இலக்குமி ஆலை மேல் நிலைப் பள்ளிக்கு ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் போது தினமும் நடந்தே சென்று வருவேன். பேச்சுத் துணைக்கு பக்கத்து வீட்டு பையன் ஒருவன், ஒரு வருடம் முந்திய வகுப்பில் படிப்பவன்.

என் வீட்டிலோ அவன் கூட சேரக்கூடாது, அவனது பழக்க வழக்கம் சரியில்லை என கட்டுப்பாடு. அவனும் அப்படித்தான். இருந்தாலும் அவன் எனக்கு கொஞ்சம் முன்னே கிளம்பி போவது போல போக்கு காட்டி விட்டு தெரு திரும்பியதும் நின்று எனக்காக காத்திருப்பான். நான் மெதுவாக கிளம்பி கொஞ்சம் வேக நடை போட்டு அவனுடன் சேர்ந்து கொள்வேன்.

இலக்குமி ஆலை குடியிருப்பு வழியாகத்தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். குடியிருப்பில் இருப்பவர்களில் எங்களைத் தெரியாதவர்கள் யாருமே கிடையாது. நிறைய சொந்தக்காரர்கள் வேறு அங்கே.

ஆழ்வார் நாயக்கர் என்று ஒருவர் எங்கள் இருவரின் வீட்டுக்கும் ரொம்ப பழக்கம். அவர் வீட்டை அடையும் போது அடிக்கடி எங்கள் வேலையைக் காட்டுவோம்.

வாசலில் போய் நின்று கொண்டு கதவைத் தட்டுவோம். சாவித்துவாரம் வழியாக கதவைத் திறக்க ஆள் (பெரும்பாலும் அவரது மனைவி, அத்தை) நெருங்கியவுடன் சத்தமே இல்லாமல் வீட்டை ஒட்டிய சந்து வழியாக ஓடிப்போய் பின்வாசல் கதவை தட்டுவோம். குழப்பத்துடனும் கோபத்துடனும் அவர்கள் பின் வாசலுக்கு வருவதை பின்வாசல் கதவு இடைவெளி வழியாக பார்ப்போம். கதவை நெருங்கும் வரை தட்டிக் கொண்டிருந்து விட்டு, திறக்கும் சமயத்தில் பக்கத்து சந்து வழியாக ஓடித் தப்பி விடுவோம். இது அடிக்கடி நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் முன்வாசல் கதவைத் தட்டிய அடுத்த வினாடியே கதவு படாரென திறக்கப்பட்டது. ஆழ்வார் நாயக்கர் கோபத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த என் டுபாக்கூர் நண்பன் அரண்டு விட்டான். நான் சமயோசிதமாக குடிக்க தண்ணீர் கேட்டு நிலைமையை சமாளித்து விட்டேன். நண்பன் பேய் முழி முழித்ததில் ஆழ்வார் நாயக்கருக்கு தெரிந்து விட்டது நாங்கள் தான் 'அவர்கள்' என்று, இருந்தாலும் அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கொஞ்ச நாள் வ‌ரை அவ‌ர் வீட்டுப்ப‌க்க‌ம் போகாம‌ல் இருந்து விட்டு மீண்டும் வேலையைக் காட்ட‌ ஆர‌ம்பித்து விட்டோம்.

கடைசியாக ஒரு நாள் முன்வாசல் கதவைத் தட்டி விட்டு பின்வாசலுக்கு ஓடும்போது அங்கு கிங்காங் மாதிரி கையை விரித்துக் கொண்டு தயாராக இருந்த ஆழ்வார் நாயக்கர் இருவரையும் கோழிக்குஞ்சு அமுக்குவது போல அமுக்கி விட்டார். இருவரும் படிக்கும் வகுப்பு, வாத்தியார் பெயர்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். தெரிந்த பையன்கள் என்பதாலும் நாங்கள் விட்ட நீலிக்கண்ணீராலும் ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார். வாத்தியாரிடம் சொல்லி அடி வாங்கிக் கொடுப்பதாகவும், வீட்டில் சொல்வதாகவும் அவர் மிரட்டிய மிரட்டலில் அடுத்த சந்துக்கு போய் ஒண்ணுக்கு போக வேண்டியதாகி விட்டது. அதற்க‌ப்புறம் அந்த பக்கமே போவதில்லை. கொஞ்ச நாள் கழித்து எங்கள் இருவர் வீட்டுக்கும் அவர் வந்த போது 'கதவு தட்டிய' விஷயத்தை ஏற்ற இறக்கங்களுடன் நகைச்சுவையாக சொன்னதில் அடி விழாமல் திட்டு வரை போய் நின்றது.

அதன் பின்னர், குளிர் விட்டுப் போய் விட்டது. தினமும் காலையில் போகும் போதும் மாலையில் திரும்ப வரும் போதும் இது மாதிரி வெவ்வேறு வீடுகளில் வாலாட்டி விட்டு வருவோம். ஒரு வீட்டில் வாலாட்டி விட்டால் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் திரும்ப அந்த வீட்டு 'முறை' வர. இந்த விஷயத்தில் நிபுணர்கள் ஆகி விட்டோம். கடைசி வரை எங்கேயும் சிக்கவே இல்லை.

அசை 7