அசை.

அசை 7 - தோட்டம்

எங்கள் ஆரம்பப் பள்ளிக்குப் (இலக்குமி ஆலை துவக்கப்பள்ளி, மேற்கு) பின்புறம் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. சகல மரங்களும் செடிகளும் அங்கே உண்டு. அங்கே ஒரு பெரிய ‘நவ்வா மரம்’ இருந்தது, அந்த நாவல் பழங்கள் அளவில் பெரியவை அல்ல என்றாலும் சுவை ரொம்ப நன்றாக இருக்கும். இனிப்பு, துவர்ப்பு என்று கலந்த ஒரு அருஞ்சுவை அது. மரத்தைத் தாண்டி தான் கழிவறை செல்ல வேண்டும் என்பதால் அடிக்கடி ஒண்ணுக்கு போகிற சாக்கில் போய் நவ்வாப் பழங்களை ஆட்டையப் போட்டுத் திங்கும் பழக்கமும் சிலருக்கு இருந்தது.

‘கருவப்பில’ என்ற கறிவேப்பிலை தான் அங்கு பெரும்பகுதி இடத்தை அடைத்துக் கொண்டு காடு போல வளர்ந்திருந்தது. பாம்பும் பூரானும் அடிக்கடி அங்கே தென்படும், அடிபடும். வாரத்துக்கு ஒரு பாம்பாவது அடிபட்டு உயிர்விடும். ஆனால் எனக்குத் தெரிந்து வெகு அபூர்வமாகத்தான் பாம்புகள் பள்ளிக்குள் வரும், யாரையும் பாம்பு கடித்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் வாயில்லாப் பாம்புகள் தான் அடிக்கடி அடிபட்டு செத்துக் கொண்டிருந்தன. நானே எத்தனையோ அப்பிராணி பாம்புகளை அடித்துக் கொன்றிருக்கிறேன். அது பெரிய வீரம் என்ற நினைப்பு.

பள்ளிக்கு எதிரே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. விளையாட்டு நேரத்தில் அங்கே பிள்ளைகளை விட்டால் ஏதாவது சண்டை போட்டுக்கொண்டு வந்து கோள் சொல்லுவார்கள், காயம்பட்டு வருவார்கள் என்று பயந்தோ என்னவோ, ‘தோட்டத்துக்கு போங்கலே’ என்று பத்தி விடுவார்கள் வாத்தியார்கள். அங்கே எங்களுக்குரிய வேலை, தோட்டத்தைச் சுத்தம் செய்வது. குறைந்தது ஒரு வகுப்புப் பட்டாளமாவது தினசரி அந்தத் தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும். ஆனாலும் எனக்குத் தெரிந்து அந்தத் தோட்டம் சுத்தமாக இருந்ததே இல்லை. எங்கு காலை வைத்தால் என்ன ஆகுமோ என்று தோன்றும். அவ்வளவு செடி, செத்தைகள், சருகுகள், சுள்ளிகள் மிதிபடும். ஆனால் அந்த சூழலே வெகு இனிமையாக இருக்கும். பல்வேறு பறவைகளின் இனிய குரல்கள் எங்கோ இழுத்துச் செல்லும். தோட்டத்தில் நுழைந்தவுடனே வரும் அந்த ‘நவ்வா மர, கருவப்பில செடி’ வாசனைகள் ஆகியவை சேர்ந்து ஒரு ரம்மியமான சூழலை உருவாக்கும். அந்த சூழலில் எப்படி யாரும் தூங்காமல் இருந்தோம் என்று தெரியவில்லை.

ஒருமுறை அப்படி தோட்டத்தை சுத்திகரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சிறிய முள் என் ஆட்காட்டி விரலில் குத்தி ரத்தம் வந்து விட்டது. பெரிய வலி எதுவும் இல்லாததால் அதை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கத்திலிருந்த பையன் அதைப் பார்த்து என்னவென்று கேட்டான். ‘ஒண்ணுமில்ல, பூரான் கடிச்சிருச்சி’ என்று சும்மா ரீல் சுற்றினேன். அவன் மெதுவாக நழுவிப் போய் டீச்சரிடம் வத்தி வைத்து விட்டான்

அவ்வளவு தான் ஒரே களேபரமாகி விட்டது. (அங்கே என் அம்மா ஆசிரியராக பணியாற்றியதால் எப்போதும் எனக்கு தனி கவனிப்பு உண்டு, எல்லோருக்கும் என்னைத் தெரியும்). ‘எரும‌மாடு, வாலே எங்கூட‌’ என்று வைது கொண்டே எதிரிலிருந்த வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போன தனபாய் டீச்சர் அங்கே ரெண்டு உப்புக்கல்லை வாங்கி ‘பூரான் கடித்த’ இடத்தின் மீது அதை வைத்து தீக்குச்சியைப் பற்ற வைத்துக் காட்டினார்கள். உப்புக்கல் லேசாக நீலம் பாரித்து உருகவும், ‘பாத்தியாலே, வெசம் உப்பு வழியா இறங்கிட்டுது’ என்றார்கள். நான் கடைசி வரை உண்மையைச் சொல்லவே இல்லை. பொய் சொல்லியது தெரிந்தால் அவ்வளவுதான்… வீட்டில் வெறும் உப்புக்கல்லின் மீது தீக்குச்சியைப் பற்றவைத்துக் காட்டி ஆராய்ச்சி செய்து பார்த்த போதும், அது நீலம் பாரித்து உருகியது.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த பள்ளிக்கு சென்ற போது, அந்த நவ்வா மரத்தைக் காண நேரிட்டது. சுத்தமாக நோய்ப்பட்டிருந்த அந்த மரம் இப்போதோ அப்போதோ என்று வதங்கி இருந்தது. கறிவேப்பிலைக் காடும் நாசமாகி இருந்தது. அந்த தோட்டமே விரீரென்று இருந்தது. குப்பை கூளங்களே இல்லாமல் ஓரளவு சுத்தமாக இருந்தது. பறவைகளின் சப்தமே இல்லை. இப்போது அங்கெல்லாம் குறைந்த அளவில் கூட பாம்புகள் வசிப்பது சந்தேகமே. வேலிக்குப் பின்னால் வெட்ட வெளியாக இருந்த இடங்களில் உயர்தர செம் பூசிய கட்டிடங்கள் எழும்பி இருந்தன. மனது கனத்தது.

அசை 8