அசை.
அசை 9 -  சென்னகேசவன் டாக்டர்

கோவில்பட்டியில் சென்ன கேசவன் டாக்டர் என்று ஒரு மருத்துவர் இருந்தார். ரொம்ப கைராசிக்காரர். எப்போதும் கடும் கூட்டமாக இருக்கும் அவரது ஜீவா மருத்துவமனையில்.

முதலில் இரண்டு ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார் அதன் பின் எனக்குத் தெரிந்து கட்டணம் ஐந்து, பத்து ரூபாய் அளவிலேயே இருந்தது. மற்ற மருத்துவர்கள் வாங்கும் கட்டணத்தில் பாதியை விடக் குறைவு கட்டணம்.

சாதி வித்தியாசம் பார்க்காத அவர் ஏழை பாழைகளுக்கு கடவுளாகவே விளங்கினார். சளி இருமலுக்கு அவர் தரும் மிக்சர் மருந்து ரொம்ப பிரசித்தம்.

அமைதியாக‌ நோயாளிக‌ளைப் பார்ப்பார், அனாவ‌சிய‌மாக‌ ஒரு வார்த்தை கூட‌ பேச‌ மாட்டார். க‌ட்ட‌ண‌ம் கொடு, இவ்வ‌ள‌வு கொடு என்றும் எவ‌ரிட‌மும் கேட்ட‌தில்லை. கொடுத்தால் வாங்கிக் கொள்வார். அந்த மாதிரி தர்ம வைத்தியம் பார்த்த புண்ணியவானைக் கூட காசு தராமல் வேண்டுமென்றே ஏமாற்றியவர்களும் இருந்தனர். அபார‌மான‌ நினைவாற்ற‌ல் கொண்ட‌வ‌ர், யாருக்கு என்ன‌ வியாதி என்று மீண்டும் வ‌ரும்போதெல்லாம் கேட்ட‌தே இல்லை.

அவரிடம் கம்பவுண்டராக பணி புரிந்து கொண்டிருந்த‌ ஒருவரும் மிகப் பிரபலம். காயங்களுக்கு மருந்து கட்டுவது மட்டுமே அவரது வேலையாக இருந்தது. இவரும் ரொம்ப கைராசிக்காரர். எப்பேர்ப்பட்ட காயமாக இருந்தாலும் இவர் கையால் இரண்டு மூன்று முறை கட்டு கட்டினால் குணமாகி விடும். காயத்தில் வைத்துக் கட்ட பிரத்யேகமாக ஒரு மஞ்சள் மருந்து துணி உபயோகப்படுத்தப்படும், அதன் வீரியம் தான் காரணம் என்று சொல்வார்கள்.

நான் சின்ன‌ வ‌ய‌தில் சேட்டை செய்து ஓடியாடி கை கால்க‌ளில் 'விழுப்புண்'களுடன் குறைந்த‌து இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு ஓரிரு முறை இவ‌ரிட‌ம் போய் திட்டு வாங்கிக் கொண்டே க‌ட்டு போட்டுக் கொள்வேன்.

சென்ன‌ கேச‌வ‌ன் டாக்ட‌ர் அவ‌ர‌து க‌டைசி கால‌த்தில் ச‌க்க‌ர‌ நாற்காலியிலேயே சில‌கால‌ம் வாழ்ந்து நோயால் அவ‌திப்ப‌ட்டு கால‌மானார். அவ‌ர‌து இறுதி ஊர்வ‌ல‌த்திற்கு மிக‌ப்பெரிய‌ அள‌வில் பொதும‌க்க‌ள் திர‌ண்டு அஞ்ச‌லி செலுத்தின‌ர்.

அசை 10