கட்டுரைகள்.

பேரீச்சம்பழ வெடிகுண்டு

சென்னை வந்த புதிதில் அயனாவரத்தில் இருந்த உறவுக்காரன் கடைக்கு சென்றேன். போகும் போது நடைபாதைக்கடையில் பேரிச்சம்பழத்தை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டேன்.

கடைக்கு போய் பேசிக் கொண்டே காகித பொட்டலத்திலிருந்து பேரீச்சம்பழத்தை எடுத்ததுமே உறவினனின் முகம் அஷ்ட கோணலானது. பிளாட்பாரத்தில் வாங்கியது என்று அவனுக்கு புரிந்து விட்டது, சடாரென பொட்டலத்தை பிடுங்கி குப்பையில் வீசி விட்டான்.

அவன் சொன்ன காரணம் அதிர்ச்சி தருவதாக, அருவெருப்பாக இருந்தது.

யானைக்கால் வியாதியஸ்தர்கள் பேரீச்சம்பழத்தை கிலோ கணக்கில் வாங்கி, காலில் வீங்கிய பகுதியின் மேலாக வைத்து துணியால் சுற்றி கட்டி விடுவார்களாம். வீக்கத்திலுள்ள நீரை பேரீச்சம்பழங்கள் உறிஞ்சி விடுமாம். பின்னர் அவற்றை காய வைத்து நடைபாதைக் கடைக்காரர்களிடம் குறைந்த விற்று விடுவார்களாம். அது மறுபடி இந்த மாதிரி விற்பனைக்கு வருமாம்.

அன்றிலிருந்து நான் பேரீச்சம்பழம் சாப்பிடுவதையே (பிராண்டட் கூட) நிறுத்தி விட்டேன்.

இதெல்லாம் உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் நெருப்பில்லாமல் புகையாதே. மதுரையில் பிசுபிசுப்பான அருவெருக்கத்தக்க வகையிலான பேரிச்சம்பழம், கோபுரம் போல குவித்து விற்கப்படுவதை பார்த்திருக்கிறேன். விளக்கொளியில் பளபளவென மின்னும் அந்த 'கோபுரம்'. கடை விலையில் பாதி விலைக்கே பேரீச்சை அங்கு கிடைக்கும் என்றும் சொல்வார்கள்.  

=========